IV
யூதர் குடியேற்றத்தின் விளைவு
1919ம் வருஷத்திலிருந்து 1938ம் வருஷத்திற்குள், பாலஸ்தீனத்தில் சுமார் மூன்று லட்சம் யூதர்கள் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அங்கஹீனர்களோ, வயதான கிழவர்களோ இல்லை. உழைக்கிற சக்தியும், இடத்தையும், பொருளையும் சந்தர்ப்பம் பார்த்து உபயோகிக்கிற திறமையும் நிரம்பப் பெற்றவர்கள். இவர்கள், தாங்களாக மட்டும் வரவில்லை. சுமார் எட்டு கோடி பவுன் மூலதனத்தையும், கூடவே கொண்டு வந்தார்கள். உழைப்பும், பணமும் ஒரு சமூகத்தாரிடத்தில் ஒன்று சேர்ந்திருக்குமானால், அந்தச் சமூகத்தார் எந்த நாட்டிலும், எத்தகைய தர்மசங்கடமான நிலையிலுங் கூட வெற்றி காண முடியுமல்லவா? இவர்கள், தங்களுக்கு அநுகூலமான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லையென்று சும்மாயிருக்க மாட்டார்கள்; சந்தர்ப்பங்களைச் சிருஷ்டி செய்து கொள்வார்கள். பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் இம்மாதிரியினரே.
யூதர்களின் குடியேற்றத்திற்கு முன்னர், அராபியர்கள், ஏதோ அற்ப சொற்பமாக, தங்களுடைய அன்றாட ஜீவனத்திற்குப் போதுமான அளவு சிறு