யூதர் குடியேற்றத்தின் விளைவு
31
சிறு துண்டு நிலங்களில் விவசாயஞ் செய்து வந்தார்கள். இந்த நிலங்களும், இவர்களுக்குச் சொந்தமாயிராது. நிலச் சுவான்தார்களிடமிருந்து, குத்தகைக்கோ, வாடகைக்கோ பெறப்பட்டதாக இருக்கும். மகசூலில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகம் முதல், மூன்றில் ஒரு பாகம் வரை, நிலச் சொந்தக்காரர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். இங்ஙனம், இவர்கள் ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டு வந்த போதிலும், சாசுவதமாக ஒரே நிலத்திலேயே சாகுபடி செய்து கொண்டிருக்கலாம் என்ற நிச்சயம் இராது. நிலச் சொந்தக்காரர்கள், தங்கள் இஷ்டப்படி நிலத்தைப் பிரித்தோ, மாற்றியோ வேறு யாருக்கேனும் கொடுத்து விடுவார்கள். இங்ஙனம் விவசாயிகள் தங்கள் உழைப்பின் ஊதியத்தில் ஒரு பகுதியை நிலச் சொந்தக்காரர்களுக்குக் கொடுத்து விடுவதோடு, தாங்கள் கடன் பட்டிருக்கும் லேவாதேவிக்காரனுக்கு ஒரு பகுதியைக் கொடுத்து விடுவார்கள். விவசாயிக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, தேவையை உண்டு பண்ணியோ, அதிகப் படுத்தியோ விடுகிறான் லேவாதேவித் தொழில் நடத்துகிறவன். இந்தச் சாபக்கேட்டிற்கு பாலஸ்தீன அராபிய விவசாயிகள் புறம்பாகவில்லை.
விவசாயம் இந்த நிலையிலிருக்க, கைத்தொழில்கள் இல்லவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பரம்பரையாக வந்த சில குடிசைத் தொழில்கள், விவசாயிகளின் மற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தன.