42
பாலஸ்தீனம்
3. நாங்கள் செய்யும் வியாபாரத்தினாலோ, நடத்தும் தொழில்களினாலோ அராபியருக்கு பாதகம் ஏற்படவில்லை. அதற்கு மாறாக, சாதகமே ஏற்பட்டிருக்கிறது. எப்படியென்றால், எங்களின் தொழில் ஸ்தாபனங்கள் பெருகப் பெருக, அராபியர்களுக்கு அதிகமான கூலி வேலை கிடைக்கிறது. அவர்களுடைய விவசாயப் பொருள்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.
4. நாங்கள் நவீன வைத்திய வசதிகளையும், சாஸ்திரீய விவசாய வசதிகளையும் பாலஸ்தீனத்தில் கொண்டு புகுத்தியிருக்கிறோம்.
5. எங்களுடைய குடியேற்றத்தினால், அராபியர்களின் வாழ்க்கை அந்தஸ்து உயர்ந்திருக்கிறது.
இப்படியெல்லாம், இவர்கள் கூறிக் கொண்டு வந்த போதிலும், டெல்—அவீவ் நகரத்திற்கு வெகு சமீபத்தில்தான், ஆயிரக்கணக்கான அராபிய விவசாயிகள் மண் குடிசைகளிலும், மரப் பொந்துகளிலும் வசிக்கிறார்கள். யூதர்கள் வசிக்கிற புதிய ஜெருசலேம் நகரத்தைத் தாண்டி, அராபியர்கள் வசிக்கும் பழைய ஜெருசலேம் நகரத்தைச் சென்று பார்த்தால், யாருக்குமே ஒரு திகைப்பு உண்டாகும். அராபிய விவசாயிகளின் அல்லது தொழிலாளர்களின் வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்தும் விஷயத்தில், யூதர்கள் எவ்வளவு சிரத்தை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, மேலே கூறப்பட்ட காட்சிகள் மௌனமாகப் பதிலளிக்கின்றன.