உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யூதர்கள்‌ சாதித்ததென்ன?

43

பொதுவாகவே, அராபியர்களுடைய தேசீய உணர்ச்சிக்கு, யூதர்கள் அவ்வளவு மதிப்புக் கொடுக்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்கு விரோதமாக, அராபியர்கள் காட்டும் எதிர்ப்பெல்லாம் வெறும் போலி எதிர்ப்பே என்பது இவர்கள் கருத்து. பாலஸ்தீனத்தில் யூதர்கள் கொண்டு புகுத்தியிருக்கும் புதிய நாகரிகம், உயரிய வாழ்க்கை, அந்தஸ்து முதலியவைகளினால், தங்களுடைய செல்வாக்கு எங்குக் குறைந்து விடுமோவென்று அஞ்சும் சில அராபிய நிலச் சுவான்தார்கள், மதத் தலைவர்கள் முதலியோருடைய தூண்டுதலின் பயனாகவே, இந்த அராபியக் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்று யூதர்களுக்கு அநுதாபங் காட்டுகிற வேற்று நாட்டார் சிலர் கூட நினைக்கிறார்கள். என்ன விந்தை!

யூதத் தலைவர்கள் பேசும் பேச்சுக்களில் கூட, அராபிய உணர்ச்சிக்கு மதிப்புக் காட்டவில்லை. தாங்கள் அராபியர்களோடு சமரஸம் பேசத் தயாராயிருப்பதாக மட்டும் இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனையுடன். யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடி புகும் உரிமையானது, இந்தச் சமரஸப் பேச்சுக்களினால், எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்கிறார்கள். இதுதானே மூலாதாரமான பிரச்னை. இதில், அராபியர்கள் எளிதில் இணங்கிப் போவார்களா? ‘அராபிய அரசியல்வாதிகளோடு சமரஸம் பேசுவதென்பது நடை பெற முடியாத காரியம்’ என்கிறான் யூதத் தொழிலாளர் கட்சித் தலைவர்களில் ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/53&oldid=1672026" இலிருந்து மீள்விக்கப்பட்டது