இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70
பாலஸ்தீனம்
அங்கீகரித்து விட்டதைத் தாங்கள் பாராட்டுவதாகத் தெரிவித்து விட்டு, அராபியர்கள் ஏன் பிரிவினைக்கு விரோதமாயிருக்கின்றனர் என்பதற்கு வரிசைக் கிரமமாகச் சில காரணங்களைக் குறிப்பிட்டனர்.
1.பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று தனி நாடு ஒன்று ஒதுக்கிக் கொடுக்கப்படுமானால், அந்த நாட்டிலுள்ள அராபியர்களுக்குக் கடல் தொடர்பும், சிரியாவிலுள்ள தங்கள் அராபிய சகோதரர்களுடைய தொடர்பும் இல்லாமற் போய் விடும். தவிர, இப்பொழுது, யூதர்களுக்கென்று பிரிக்கப்பட்டுள்ள பிரதேசம், பாலஸ்தீனத்திலுள்ள மற்றப் பிரதேசங்களைக் காட்டிலும் மிகச் செழுமையானது. இதனால் யூதர்கள், நாளா வட்டத்தில் தங்கள் எல்லையை விஸ்தரித்துக் கொள்வார்கள்.
2. யூதர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில், அராபியர்களுக்குச் சொந்தமான பல ஆரஞ்சுப் பழத் தோட்டங்கள் முதலியன இருக்கின்றன. இவைகளை யெல்லாம் அராபியர்கள் இழந்து விட வேண்டியிருக்கும்.
3. பாலஸ்தீனத்திலுள்ள புனித ஸ்தலங்களைப் பாதுகாப்பதாகிற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு, சில பிரதேசங்கள், பிரிட்டிஷாருடைய நிரந்தர நிருவாகத்திற்குட்படுத்தப்பட வேண்டுமென்ற யோசனையை நாங்கள் பலமாக எதிர்க்கிறோம்.