இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரிவினைப் பிரச்னை
71
இந்த மூன்றாவது ஆட்சேபத்தைப் பற்றி ஒரு பிரபல அராபியப் பத்திரிகை பின் வருமாறு எழுதியது:-
பிரிட்டிஷாருடைய நிரந்தர நிருவாகத்திற்குட் படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் அமைக்கப் பெறும் இந்தப் பிரதேசத்தையும், ஹைபா, அக்காபா என்ற துறைமுகங்களைப் பற்றிக் கூறப் பெற்றுள்ள சிபார்சுகளையும், பட்ச பாதமற்ற ஒருவன் கூர்ந்து கவனிப்பானாகில், மத சம்பந்தமான பிரச்னைகளுக்குப் பதில், ஏகாதிபத்திய, ராணுவ பிரச்னைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றிருக்கின்றது என்பது நன்கு புலப்படும். லிட்டா, ராம்லே என்ற நகரங்களிலுள்ள ஆகாய விமான நிலையங்களும், எகிப்து, ஹைபா, ஜெருசலேம், ஜாபா ஆகிய பல இடங்களிலிருந்து வரும் ரெயில்வேக்கள் சந்திக்கிற லிட்டா ரெயில்வே ‘ஜங்க்ஷனு’ம், யதேச்சையாக பிரிட்டிஷாருடைய நிருவாகப் பிரதேசத்தில் அமைந்து கிடக்கின்றன வென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சூயஸ் வாய்க்காலையும், செங்கடலையும் காத்து நிற்கிற அக்காபா துறைமுகத்தின் முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இந்த அக்காபா துறைமுகத்திற்கும், புனித ஸ்தலங்களுக்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் இருக்றது, இனி எத்தகைய சம்பந்தம் இருக்கும் என்ற விவரங்கள் சொல்லப் படவில்லை.