பக்கம்:பாலும் பாவையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இந்த அப்பாவி பெண் ஏன் இப்படிக் கட்டிக் கொண்டு அழுகிறாள்..? அட, கஷ்டமே! இன்று ராஜாக் களைக் காணோம், ராணிக்களைக் காணோம்; அரண்மனைகளைக் காணோம், அந்தப்புரங்களைக் காணோம்; மாடமாளிகைகளைக் காணோம், கூடகோபுரங்களைக் காணோம்-அப்படியிருந்தும் இந்தப் பாழாய்ப் போன காதல் மட்டும் ஏன் இன்னும் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறது? ஏதும் அறியாத அபலைகளை ஏன் இப்படிப் பிடித்து வாட்டிக் கொண்டிருக்கிறது..? கனகலிங்கத்துக்கு வெறுப்பு ஒரு பக்கம்; கோபம் ஒரு பக்கம்-இரண்டையும் மீறி அவன் சிரிக்க முயன்றான். "ஆம், சிரித்துப் புரம் எரித்த சிவனைத்தான் இவள் விஷயத்தில் நானும் பின்பற்ற வேண்டும்.' இந்த முடிவுக்கு வந்ததும் அவன் அவளை மீண்டும் வெறித்துப் பார்த்தான். 'என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?” என்று அவள் மறுபடியும் கேட்டாள். "பிடிக்காமலென்ன?-பாலைப் பிடிக்காத பூனை உண்டா, பூனையைப் பிடிக்காத பால் உண்டா? பட்டாணிக் கடலையைப் பிடிக்காத குரங்கு உண்டா, குரங்கைப் பிடிக்காத பட்டாணிக் கடலை உண்டா? விளக்கு மாற்றைப் பிடிக்காத முறம் உண்டா, முறத்தைப் பிடிக்காத விளக்குமாறு உண்டா..?” "இது என்ன, கேட்டதற்கு உண்டு, இல்லை என்று பதில் சொல்லாமல் சினிமாவில் வரும் காதலன் மாதிரி ஏதேதோ உளற ஆரம்பித்து விட்டீர்களே..?” "பின் காதலென்றால் நீ என்ன வென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?-அது ஒரு பைத்தியம்: பைத்தியம் உளறாமல் வேறு என்ன செய்யும்?” “ரொம்ப அழகுதான்!” “யார்?-நீயா, நானா?”