பக்கம்:பாலைக்கலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திணை விளக்கம் 83 திணை விளக்கம் பழந்தமிழ்ச் சான்றோர்கள், தமிழர்தம் வாழ்வியலை இருகூறாகப் பிரித்து ஆராய்ந்தார்கள். அவை அகம், புறம் என்பன. இவற்றுள், புறம் புறவாழ்வில் மேற்கொண்டு ஒழுகிவந்த ஒழுகலாறுகளை வகைப்படுத்தி முறைப்படுத்திக் கூறுகின்றது. இனப் பற்றும் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் அறநெறிப்பற்றும் மிகுந்திருந்தவரான பழந்தமிழர்கள், இவைகளைக் கருத்தாகப் பேணுவதற்கு மேற்கொண்ட ஆண்மை சார்ந்த பல்வேறு பணிகளும், அவர்கள்தம் போரியல் மரபும் இப் புறத்திலே நன்கு காட்டப்பெறும். அகம் அக வாழ்விலும் தமிழர்கள் செவ்வையாக அன்பின் எழுச்சிசார்ந்த நெறியோடு வாழ்ந்ததன் தகைமையைக் கூறுகின்றது. இதன் அடிப்படை, கன்னியொருத்திக்கும் காளையொருவனுக்கும் இடையே முகிழ்த்து வளர்ந்து மணம் நிறைக்கும் காதலன்பே ஆகும். இந்த அன்பின் எழுச்சியால் ஏற்படும் நெகிழ்ச்சியினால், அவர்கள் உள்ளத்தே தோன்றித் தோன்றி அரும்புகின்ற எண்ணங்களிலே, இன்பமும் துன்பமும், களிப்பும் கலக்கமும் இணைந்து, அவர்கள் வாழ்வியலை உருவாக்கும் வகைமைகளை எல்லாம் இந்தப் பகுதியிலே நாம் கண்டறிந்து தெளியலாம். பெரும்பாலும், உள்ளத்திலே நிகழும் நினைவுப் போராட்டங்களாகவே இவை அமைந்தாலும், அணுக்கரான சிலரிடம் மனந்திறந்து உரைப்பதாகவும் விளங்கி, அறிந்து கற்கும் நம்பாலும் அந்த மன உணர்வுகளை எழச்செய்யும் தகைமை கொண்டனவாக விளங்குகின்றன. அன்புறு காமஞ் சார்ந்த இந்தப் பகுதியும், ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று நிலைபற்றியவாகப் பகுத்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும் இலக்கண நூலார் குறிப்பார்கள். இவற்றுள், அன்புடைக் காமம் என்பது, ஐவகையான நெறிபற்றி இயல்வதென்பர். அவை, ஐவகை நிலங்களின் தன்மைகளை ஒட்டியவாய், அவ்வச் சூழல்களோடு பின்னிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/91&oldid=822089" இலிருந்து மீள்விக்கப்பட்டது