பக்கம்:பாலைச்செல்வி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 9 கொண்டுள்ளாள். அவ்வேட்கை மிகுதியினாலேயே, பேரறம் பல பண்ணிப் பெற்றுப் பேரன்பு காட்டி வளர்த்த தாய் தந்தையரை மறந்து, புதியனாய இவன் பின்வந்து வாழ்கிறாள். அத்தகையாள், அவன் பிரிந்து விடுவன்; அவனைப் பிரிந்து, தனித்துப் பலநாள் வாழ வேண்டும் என உணர்வளேல், அந்நிலையே அவள் உயிர் அழிந்து விடும். மனைவியின் துணையின்றி மனையறம் சிறவாது; சிறவாது என்பது மட்டுமன்று, அது நிகழாது; என்றால், அவளை அறவே இழந்தவிடத்து, ஆங்கே, மனை, மனையறம் என்ற பேச்சுக்கே இடம் இன்றாம். ஆகவே, வாழ்க்கையை வளம் ஆக்குதல் வேண்டும் எனும் ஆர்வத்தால், அவன் மேற்கொள்ளும் பொருள்வயிற் பிரிவு, அவ்வாழ்க்கையை வறண்ட பாலையாக்கிவிடுமோ எனும் அச்சவுணர்வே, அவன் போக்கறிந்து, அவள் அஞ்சுதற்குக் காரணமாம். "மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது” எனும் குறள்நெறி உணராதவள் அல்லள் அத்தோழி. அதை அறிந்தே, பொருள் தேடிச்செல்லும் அவன் முயற்சியினை வெறுத்தாள். அவனும் அவன் மனைவியும் இளமைப் பருவத்து இன்ப உலகில் அப்பொழுதுதான் அடியெடுத்து வைத்துள்ளார்கள்; அதற்கு இந்த நிலையில் இடையூறு உண்டாதல் கூடாது; இளமை வாழ்வு இறவா இயல்புடைத்தன்று, கண்டு கொண்டிருக்கும்போதே கழிந்துவிடும் இயல்புடையது அது; இன்பம் நுகர்தல் இளமைக் காலத்திற்கே இயலும்; அவ்விளமை கழிந்த பின்னர், வாழ்க்கை இன்பம் தருவது இல்லை; இழந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/11&oldid=822110" இலிருந்து மீள்விக்கப்பட்டது