பக்கம்:பாலைச்செல்வி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ 117 - பின்னரும் அவ்வாறே இருக்கும் என எண்ணற்க. நீ பிரிந்தாய் என்பதை அறிந்த அப்போதே, அம்முகம், பாம்பால் பற்றப் பட்ட திங்கள், தன் பேரொளி குன்றித் தோன்றுவது போல், பசலை படர்ந்து, கறுத்துக் கவின் இழந்து போம். அது அவ்வாறு அழகிழந்து போமாறு அவளை விடுத்துப் பிரியும் நின் கருத்து கல்விப் பொருட்டாயின், ஐய! யான் ஒன்று வினவுகோ: ஐயம் திரிபு அறக் கற்ற பேரறிவும், பரந்த கேள்வியும் ஒருங்கே உடைமையால், ஒழுக்கத்திற் சிறந்து உயர்ந்தோராய் விளங்கும் ஆசிரியர்களைத் தேடிச் சென்று, வணங்கி வழிபட்டு, அவர்பால் நீ பெற்ற தெளிந்த அறிவும், அவ்வறிவு வழி ஒழுகும் நின் ஒழுக்க நெறியும், அவள் முகத்திற்கு அப் பண்டைப் பேரொளியை மீட்டுத் தருமோ? அவள் முகத்தை மீண்டும் மாசற்ற மதிபோல் ஆக்கும் ஆற்றல் அவளைப் பிரிந்து சென்று நீ பெறும் அவ்வறிவு ஒழுக்கங்கட்கு உண்டேல், நீ இன்றே பிரிந்து செல்க. அதை யாம் தடை செய்யேம். "ஐய! மை தீட்டிய இவள் கருவிழிகளின் கவினைக் கண்டு, கருத்திழந்து, அரும்பற மலர்ந்த நீலோற் பலங்களோ இவை! என, நீ இன்று பாராட்டும் இவள் கண்கள், நீ பிரிந்து செல்வதைக் காணின், காணும் அந்நிலையே, தம் அழகிழந்து அழத் தொடங்கி விடும். எரியும் திரியினின்றும் தெறித்துச் சிதறும் எண்ணெய்த் துளிகள் போல், கனல் தெறிக்கும் கண்ணிர் கசிந்து உருகும். இவள் கண் அவ்வாறு கலங்கிக் கவின் அழியும் என்பதை அறிந்தும், கலங்காது விடுத்துச் செல்லும் நின் வேட்கை மண்ணாசை மீதாயின், ஐயா! யான் ஒன்று வினவுகோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/119&oldid=822120" இலிருந்து மீள்விக்கப்பட்டது