பக்கம்:பாலைச்செல்வி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இ. புலவர் கா. கோவிந்தன் இடத்தே, பனைஒலையைத் தேடிப்பெற்று, அதைக் குடை போல், உள்வளையுடையவாகப் பண்ணி, அதில் நீர் மொண்டு பருகுவர். நீர் பருகுவதன் முன்னர்ப் பலபட முயன்று அக்குடையைப் பண்ணியவர், நீர் உண்டு ஒழிந்த வுடனே, அதன் பயனற்றுப் போனமையால், அதை, ஊரின் ஒதுக்கிடம் பார்த்து எறிந்து விடுவர். அந்நிலையில் அதைப் போற்றார் எவரும். காணுவார் பலரும் காலால் எற்றி எறிவர். அன்ப! அதை நீ கண்டிலையோ? 'கடல்படு பொருள், மலைபடு பொருள் போலும் பல்வகைப் பொருள்களைக் குவித்து வைத்து விற்கும் வாணிப வளம் உடைமையாலும், பேரரசின் தலைநகராய்ப் பெருமை யுறுவதாலும், பலநாட்டு மக்களும் ஒருங்கே கூடி வாழும் ஓர் ஊர், அந்நிலையில் பலரும் பாராட்டும் பெருமை வாய்ந்து விளங்கும். அவ்வூரே, அவ்வாணிப வளம் அற்றுப் போனமையாலோ, பகைவர் படையால் பாழுற்றமை யாலோ, தன்கண் வாழ்வாரை இழந்துவிடின், அந்நிலை யில் அவ்வூரைக் காணும் எவரும், அதன் பாழ்நிலை கண்டு, வாழ்வோர் போகிய பாழுர் எனப் பழிப்பர். அவ்வூரை அணுகச் செல்லவும் அஞ்சுவர். பேரன் புடையாய்! இதை நீ பார்த்ததிலையோ? பல்வேறு நிறமும், பல்வேறு மணமும் கலக்கக் கட்டிய மலர் மாலையைக் காணும் மகளிர் கண்கள் மகிழ்ச்சியால் மலரும். அதன் நிறம் கண்டும், அதன் மணம் நுகர்ந்தும், மகிழ்ச்சியால் துள்ளும் அவர் உள்ளம். அவ்வாறு பாராட்டிப் பெரும் பொருள் கொடுத்து, வாங்கிச் சூட்டிக் கொண்ட அம் மாலையைச் சூட்டிக்கொண்ட மறுநாளே, அதன் வாடிய நிலை கண்டு வெறுத்துக் களைந்து எறிவர். அந்நிலையில், அதைக் கையால் தீண்டவும் நாணிக் குப்பையொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/172&oldid=822179" இலிருந்து மீள்விக்கப்பட்டது