பக்கம்:பாலைச்செல்வி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 171 குப்பையாகக் குவித்துத் தள்ளுவர். அன்ப! இதை நீ அறிந்ததிலையோ? காதல! கணவனால் கைவிடப்பட்ட மகளிர் நிலையும் அன்னதே. அவ்வாறு, யானும் அவ்விழி நிலையுற்று அழிவதோ நின் கருத்து?" எனக் கூறி வருந்தினாள். - அவள் அத்துணையும் கூறி அழுது நிற்பதைக் கண்டும், அவன் தன் முடிபினை மாற்றிக் கொண்டா னல்லன். அதனால் அவள் சினம் கொண்டாள். பொருளின்மையால், தன்னை நோக்கிப், பொருளிலா வறியன் வருந்தி வருவார்க்கு வழங்கி வாழும் வகை யற்றவன்! என ஊரார் உரைக்கும் பழிச் சொல்லைப் போக்குதல் வேண்டிப் பொருள் தேடிச் செல்கிறான் இவன். ஆனால், இவனால் அப் பழியைத் துடைத்து வாழ்தல் இயலாது. அதற்கு மாறாகப் பழி துடைக்க மேற் கொள்ளும் முயற்சியால், தன் வாழ்க்கைத் துணையென வந்த தன் மனைவியையே இழந்து வருந்துவன். இதை அறியும் அறிவுதானும் இவனுக்கில்லையே என வருந்தினாள். வருந்துவதால் பயனில்லை, அதை அவனுக்கு விளங்க உரைத்து அறிவூட்டல் வேண்டும் என விரும்பினாள். அவ்வாறு விரும்பியவள், அதை அத்துணை வெளிப்படையாகக் கூறல், அவன் விழுமிய வாழ்க்கைக்கு இழுக்காம் என உணர்ந்தவள். அதை அவ்வாறே கூறாது, 'ஐய! கானவர் தம் புனத்தை அழிக்கும் யானையை ஒட்ட எறியும் கவண்கல், அவ் யானையை ஒட்டாது, அப்புனத் தினிடையே நிற்கும் வேங்கை மரத்தின் மலர்களால் நிறைந்து மாண்புற விளங்கும் கிளைகளைச் சிதைக்கும் கானம், நீ செல்லும் கானம்!” எனக் கானவர் அறியாமை மேல் வைத்துக் கூறி அறிவுறுத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/173&oldid=822180" இலிருந்து மீள்விக்கப்பட்டது