பக்கம்:பாலைச்செல்வி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஜ் 201 கூந்தலிடையே, செந்நிறக் கற்கள் இழைத்துச் செய்த தலைக்கோலம் வைத்து அணிசெய்தாற் போல் தோன்றிப் பேரழகு தந்தது. வையை யாற்று மணலின் வனப்பு, அவ் யாற்றின் இடை ஓடும் அருவியின் அழகு, ஆற்றின் இருகரையிலும் நிற்கும் மரங்களின் மாண்பு ஆகிய இக் காட்சிகளைக் கண்டு, மதுரை வாழ் மக்கள் மகிழ்ந்திருக்குங்கால், அக் காட்சிகள், தான் அதுகாறும் அடக்கி வைத்திருந்த தன் துயரைக் கட்டவிழ்த்துவிடக் கலங்கி நின்றாள், ஒரு பெண். அப்பெண்ணின் கணவன் அப்போது அவ்வூரில் இல்லை. கடமை மேற்கொண்டு, காடுமலைகளைக் கடந்து, சேணாடு சென்றிருந்தான். அதனால், மக்களெல்லாம் மகிழ்ந்திருக்கும் அக்காலத்தில், தான் மட்டும் வருந்தி வாட விடுத்துச் சென்ற அவன் கொடுமையினை எண்ணி எண்ணிக் கலங்கினாள், அப்பெண். அவன் அன்பற்றவன்; அருள் உள்ளம் இல்லாதவன்; ஆற்றவும் கொடியன் எனக் குற்றம் கூறிற்று அவள் உள்ளம். இவ்வாறு தன் கணவன் கொடுமை கூறி வருந்தும் அப் பெண்ணைக் கண்ட அவள் தோழி, “நின் கணவர் நீ கருதுவது போல் கொடியவரல்லர். ஆகவே, இப்பிரிவு அன்பில்லாமையால் சேர்ந்ததன்று. நின்பால் நிறைந்த அருள் உடையவர் அவர். ஆகவே, அன்பற்றவர் எனக் கொண்டு அவரைக் குறை கூறாதே." என்று கூறினாள். "கணவர் அன்புடையவர். அவரைக் குறை கூறுதல் அறமாகாது!" எனத் தோழி கூறக் கேட்ட அப் பெண், "தோழி! புணர்ந்து இருந்தார்க்குப் பேரின்பமும், பிரிந்து இருப்பார்க்குத் தீராத் துயரமும் தரும் இளவேனிற்பருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/204&oldid=822214" இலிருந்து மீள்விக்கப்பட்டது