பக்கம்:பாலைச்செல்வி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஆ புலவர் கா. கோவிந்தன் வந்துவிட்டது. மாமரம் தளிர் ஈன்றது. ஏனைய மரங்கள் மலர்ந்தன. மரங்களேயல்லால், செடி கொடிகளும் மலர் ஈன்று மாண்புற்றன. மரக்கிளைகளிலும், மலர்ச்சோலை களிலும் தும்பியும் வண்டும் தேனைத் தேடி ஆரவாரிக்கத் தொடங்கி விட்டன. மரங்களில் அமர்ந்து குயில்கள் கூவுகின்றன. ஆற்றில் அறல் ஒழுகலாயிற்று. இக்காட்சி களைக் காணும் என் கண்கள், பூப்போலும் தம் பேரழகு இழந்து, புலப்பத் தொடங்கி விட்டன. உறக்கம், அக் கண்களின் உறவை அறுத்துக் கொண்டது. என் நெற்றி ஒளி இழந்தது. பசலை படர்ந்து பாழ் செய்து விட்டது அந்நெற்றியை, தளர்ந்த என் நிலை கண்ட ஊர்ப் பெண்கள், இல்லாதனவும் போல்லாதனவும் உரைத்துப் பழிதுாற்றலாயினர். ஒரு பற்றுக்கோடாக யான் பெற்றிருந்த என் நெஞ்சம், என்னைக் கைவிட்டு, அவர் பின் சென்று விட்டது. இவ்வளவையும் கண்டு கலங்காது, இறவாது உயிர் தாங்கி நிற்கும் ஆற்றலை இழந்து விட்டேனே நான்! என் நிலை காணும் நீயும், கொடுமை செய்யும் இப்பிரிவுத் துயரை இவள் பொறுத்துக் கொள்வாள் அல்லளே எனக் கூறி வருந்துகின்றனை. என் நிலை இதுவாகவும், பிரியின் என் நிலை இதுவாம் என்பதை அறிந்தும் பிரிந்து போயினர். போனவர், என்னை மறவாது விரைந்து வருதலையாவது செய்தனரோ எனில், அதுவும் இல்லை. என்னை அறவே மறந்து விட்டார் அவர் என்னையோ, என் துயர் நிலையையோ, நினைத்துப் புTர்ப்பதும் செய்திலர். அத்தகைய கொடுமைக் குணம் நிறைந்தது அவர் உள்ளம். உண்மை இதுவாகவும், அவருக்கு நின் பால் அன்புண்டு; நிறைந்த அருள் உண்டு' என்றெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/205&oldid=822215" இலிருந்து மீள்விக்கப்பட்டது