பக்கம்:பாலைச்செல்வி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 19 இன்றியமையாததே என்பதை அவள் அறிவாளாயினும், அவன் செல்ல நினைக்கும் காலம், அதற்குத் தகுதி யுடையதன்று. ஆகவே, அவள் வருந்தினாள். உரிய கடனாற்ற ஊர்விட்டுச் சென்று வாழ்வது உயரிய அறமாம் என்பது உண்மை. ஆனால், அவ்வுண்மையை உலகில் வாழும் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கவில்லையே! "இவ்வளவு அழகும் இளமையும் உடையாளைப் பிரிந்து செல்கின்ற இவனை என்னென்பது! கடமையுணர்ச்சி யளவு, காதல் உணர்ச்சி இவனுக்கு இல்லையே! பொருளின்மீதும் புகழின்மீதும் உள்ள அளவு, இவள்மீது இவனுக்குப் பற்று இல்லை போலும்!" என்பனபோலும் பழியுரைகளைக் கூறுவோரும் உலகில் வாழ்கின்றனர். அவர் தொகையே, ஏனையோர் தொகையினும் பெரிதாம். தன்னையும், தன் கணவனையும் புகழ்ந்துரைக்கும் புகழ் உரைகளையே விரும்பும் அவள், அவன் பிரிந்து சென்றக்கால், இவை போலும் பழியுரைகளைப் பலர் அறியக் கூறித் திரியும் அறம் அறியா மக்களும் இவ்வூரில் வாழ்கின்றனரே என்பதறிந்து அஞ்சினாள். அவ்வச்சத் தோடு, விரைவிற்கடந்து சென்று மீளலாகாத் தொலைவும், மழைபெறா வறட்சியால் கண்ணிரும், கானல் நீருமல்லது, உண்ணுநீர் பெற மாட்டாக் கொடுமையும் உடைய வழியில் செல்லும் அவனுக்கு, ஆங்கு என்னென்ன கேடுண்டாமோ என்ற எண்ணத்தால் எழுந்த அச்சமும் உடன் கலந்து கொள்ளவே, அவள் துயர் மிக்கது. அந்நிலையே அவள் உடல் நலம் குன்றிற்று; தோள்கள் மெலிந்தன; கைவளைகள் கழன்று ஓடின, கண்கள் கடலாயின. அகத் துயரால் புறத்து அழகும் அழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/21&oldid=822220" இலிருந்து மீள்விக்கப்பட்டது