பக்கம்:பாலைச்செல்வி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புலவர் கா. கோவிந்தன் முழுத் திங்கள் போல் ஒளி வீசிய அவள் முகம், மாசு படர்ந்து மாண்பிழந்தது. இந்நிலையினைக் கண்டாள் தோழி. பிரிந்து செல்வன் என்பதைக் கேட்டே இவ்வாறு வருந்தும் இவள், அவன் சென்றுவிடின் உயிர்வாழாள் என உணர்ந்தாள். அதனால், அவனைப் போகாவாறு தடுத்து நிறுத்தி விடுதல் வேண்டும் எனத் துணிந்தாள். உடனே அவன்பால் விரைந்து சென்றாள். "அன்ப! நின் மனைவிக்கு உயிர் நீ உயிர் அற்று உடல் வாழ்வதில்லை. நீ பிரியின், அவள் வாழாள். நீவிர் மணந்து கொண்டு நெடுநாள் ஆகவில்லை. அதற்குள்ளாக, இத்துணை விரைவில், அவளைத் தனியே விடுத்துப் பிரிந்து செல்வாயேல், நின்னை மணந்து கொள்ளப் பெற்றமையால் பெருநலம் பெற்று விளங்கும் அவள் உடல் நலன் முற்றும் அழியும். உன் அன்பின் ஆதரவு உண்டு. அவ்வன்புத் தளை என்றும் அழியாது என்னும் உறுதியால் உயிர் வாழ்கிறாள் அவள். அத்தகையாள், அன்பிலாதான் போல், தன்னைத் தனித்திருந்து தவிக்க விடுத்துச் செல்வையெனின், அந்நிலையே இறந்துபடுவள். ஆகவே, அன்ப! இவளை இந்நிலையே விடுத்துப் பிரிந்து செல்லுதல் பொருந்தாது. அது அன்போ, அறமோ ஆகாது. ஆகவே பிரிந்து செல்வதைச் சிறிது காலம் மறந்துவிடுக!” என மன்றாடி வேண்டிக் கொண்டாள். . ஆனால், 'வினையே ஆடவர்க்கு உயிரே! என்ற உணர்வில் ஊறிப்போன அவன் உள்ளத்தை மாற்றும் ஆற்றல், தோழிக்கு இல்லாது போயிற்று. காதலையும், கடமையையும் ஒரு சேர மதிப்பவன் அவன். காதலுக் காகக் கடமையை மறந்து வாழ்வது மாண்புடைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/22&oldid=822231" இலிருந்து மீள்விக்கப்பட்டது