பக்கம்:பாலைச்செல்வி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 245 என்பதைச் சில காலம் மறந்து, காதல் வாழ்வில் கனிந்து மகிழ்ந்திருந்தனர். பிரிவறியாப் பெருவாழ்வு, அவர்க்கு நெடிது நாள் வாய்த்திலது. அந்நாட்டு அரசனின் கடமை தவறா ஒழுக்கம் அவர்கள் கடமையை அவர்க்கு உணர்த்தி விட்டது. கடமை யுணர்ச்சி வரப்பெற்ற காதலன், அக்கடமையைக் கைக்கொள்வான் வேண்டி, வெளிநாடு செல்லத் துணிந்தான். அவன் முடிவு அவன் காதலிக்குப் பெருங் கலக்கத்தைத் தந்தது. அவன் மேற்கொண்டு செல்லும் பணியின் பெருமை, அதை முடித்து மீள ஆகும் காலம், கடந்து செல்ல வேண்டிய காட்டின் கொடுமை, அவனைப் பிரிந்தறியாத தன் பேரன்பு ஆகிய இவற்றை யெல்லாம் எண்ணி எண்ணித் துயர் உற்றது அவள் உள்ளம். நிறுத்தினும் நில்லாது நீரைச் சொரிந்தன அவள் கண்கள். ஆயினும், வெளிநாடு சென்று வினை முடித்து வருதல் கணவன் கடமையாம் என்பதை யுணர்ந்த அவள் உள்ளம், அவன் பிரிவிற்கு ஒருவாறு ஒருப்பட்டது. அந்நிலையில் அவனும், போகப் புறப்பட்டான். விடைபெற்றுச் செல்ல வருவான் முன், வருந்தி நிற்றல் நேர்மையாகாது என நினைத்து, மனத்துயரை ஒருவாறு மறைத்துக் கொண்டு, "வினை மேற்கொண்டு செல்வோய்! அவ் வினைக்கண் வெற்றி பெற்று, விரைவில் மீள்க!" என வாழ்த்தி வழியனுப்பினாள். விழிநீர் துடைத்து நின்று வழியனுப்பினும், அவள் அகத்துயரை முகக் குறிப்பால் அறிந்து கொண்ட அவன், "என் ஆருயிரே! நின்னைப் பிரிந்து நெடிது நாள். வாழ்தல் என்னாலும் இயலாது. ஆகவே, விரைந்திவண் வந்து சேர்வன். வேனிற் பருவ வருகைக்கு முன்னரே, நின் மனை வந்து நிற்கும் என் தேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/248&oldid=822262" இலிருந்து மீள்விக்கப்பட்டது