பக்கம்:பாலைச்செல்வி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 37 அவன் இளைஞனே ஆயினும், அவ்விளமைக் காலத்திலேயே கற்க வேண்டிய நூல்களைக் கற்றும், கேட்க வேண்டிய அறவுரைகளைக் கேட்டும் நிறையறிவு பெற்றிருந்தானாதலின், காதலும், அக் காதற்பயனாம் இன்பமும் தன்னலம் குறுகிய நோக்குடைய, கடமையும், அதைக் குறைவற ஆற்றிப் பெறும் பொருளால் பெறலாம் புகழும் தன்னலத்தோடு பிறர் நலனும் ஒருங்குடைய, பரந்த நோக்குடைய என்பதை உணர்ந்திருந்தான். அதனால் காதலை ஒரு சிறிது மறந்து, கடமையினை மேற்கொள்ளத் துணிந்தான்; இன்பம் தரும் இல்லாளினும், இறவாப்புகழ் தரும் பொருளே சிறந்தது எனக் கருதினான். கருதியதோடு நில்லாது, அப் பொருளை விரைந்து பெறுவான் வேண்டி, அது கிடைக்கும் வெளியூர்க்கு அப்போதே செல்லத் துணிந்தான். அஃதறிந்தாள் அவன் மனைவியின் தோழி. அவள், அவன் மனைவியின் இயல்பறிந்தவள். அவனையும் அவளையும் தொடர்பு படுத்தும் அன்பின் பெருமை யறிந்தவள். அவள், கணவன் உடனிருந்து அன்பு காட்ட அகமகிழ்ந்து வாழ்பவள்; அந்நிலையில், அவளுள்ளம் கொள்ளும் ஆர்வம் மிகுதியால், அவள் உருவத் தோற்றம், முன்னினும் பேரழகு பெற்றுத் தோன்றும். அத்தகையாள், அவன், அவளை விடுத்து, ஒருநாள் பிரிந்திருப்பனாயினும், அந்நிலையே உள்ளம் உடைந்து போவாள்; தான் பண்டு பெற்றிருந்த-அவன் தொடர்பறியாக் காலத்தே பெற்றிருந்த-இயல்பான அழகினையும் இழந்து விடுவாள்; அவனைப் பிரிந்து அவள் வாழ்தல் இயலாது; அவன் பிரியின், பிரிந்த அந்நிலையே, ஞாயிறு மறைய, மறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/39&oldid=822290" இலிருந்து மீள்விக்கப்பட்டது