பக்கம்:பாலைச்செல்வி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புலவர் கா. கோவிந்தன் ஆராயும் அறிவிழந்துவிட்டனை. அதனால், அண்மையில் மணந்து கொண்ட, அன்புடைய மனைவியோடு, மனை யகத்தே பிரியாதிருந்து மகிழ்ந்து வாழ்வதே பேரின்பமாம் என்பதை உணராது, அவள் அழுது அழுது அழியுமாறு விட்டுப் பிரிந்து போய்ப் பொருள் தேடி உழல்வதிலேயே இன்பம் உளது எனப் பிறழ உணர்ந்த பிழையறிவுடை யானாயினை!” எனப் பழிக்க நாவெடுத்தவள், அதை அவ்வாறே வெளிப்பட உரைக்காது, "கோடையின் கொடுமையால் உடல் நலனும், உள்ள ஊக்கமும் ஒருங்கே அழிந்த யானை, மழை மறுத்தற்குக் காரணமாய கொடுமைகள் மிக்க பாலை நிலத்தில் தோன்றும் கானல் நீரை உண்ணும் நீர் எனப் பிறழக் கொண்டு, அது பெற அவாவி, அக் கானல் நீரின் பின் ஒடி ஒடி இளைக்கும் காட்டைக் கடந்து செல்லும், அன்ப!” என, அவன் அறியாமையினை, அவன் செல்லும் கானத்தின் யானை மீது ஏற்றிக் கூறினாள். அவ்வாறு அவனைப் பழித்தவள், பின்னர், அவன் மேற்கொள்ளும் வினைமுயற்சியினையும், அதுகண்டு அவள் படும் துயர்க் கொடுமையினையும் அவனுக்கு எடுத்துக் கூறி, "அன்ப! எமக்குத் துயர் தருவதாய நின் செலவு முயற்சி கண்டே இவ்வாறு வருந்துவாள், நீ சென்றுவிட்ட பின்னர், இறந்துபடுதல் உறுதி. ஆதலின் செல்வம் கொழிக்கும் நாடு என நீ கருதிச் செல்லும் அந்நாட்டில், நீ தேடிச் சேர்க்கும் செல்வம், நினக்குப் புகழ் தேடித் தருதலோடு, இறக்கும் இவளின் இனிய, கிடைத்தற்கரிய உயிரையும் தேடிக் கொணர்ந்து தரவல்லதாமோ? அவ்வாற்றல் அச் செல்வத்திற்கு உண்டேல், நீ செல்வதில் எமக்குத் தடையில்லை!" எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/56&oldid=822309" இலிருந்து மீள்விக்கப்பட்டது