பக்கம்:பாலைச்செல்வி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இ. புலவர் கா. கோவிந்தன் கலந்து, மக்கள் மார்பில், அம்மக்களால் பூசப்பெற்று அவர்க்குப் பயன் அளிக்கிறது. அந் நிலையில் அதன் நறுமணம் நுகர்ந்து, அதைப் பாராட்டும் அம்மக்கள், அது தோன்றிய மலையையும் மனதாரப் பாராட்டுவர். மக்கள், அம்மரத்தை அழித்து, அதைக் கொணராது விடுவரேல், அது காட்டிற் கிடையே கிடந்து, நாளடைவில், காற்றாலும், மழையாலும் அலைப்புண்டு கொன்னே அழிவுறும். அதனாற் பிறந்த மலைக்கும் மாண்பில்லை; அதற்கும் புகழ் இல்லை; அதன் நறுமணம் நுகர விரும்பும் மக்களும் நுகர்வதிலர். "கடலில் பிறக்கிறது முத்து. ஆனால், அது என்றும் ஆங்கேயே இருந்து விடுவதில்லை. கருவுற்று, உருப்பெறும் வரையே அது ஆங்கே கிடக்கும். உருவும் ஒளியும் பெற்றுப் பிறர்க்குப் பயன்படும் நிலை வந்துற்றதும், தான் பிறந்த கடலை மறந்துவிடுகிறது. பெற்று வளர்த்த அக்கடலுக்குப் பயனளித்து ஆங்கேயே இருக்க வேண்டும் என்றும் எண்ணுவதில்லை. அந்நிலை வந்தவுடனே, மக்களால் கொண்டு வரப்பட்டு, ஆரமாய் அவர் கழுத்திற் கிடந்து, அவர்க்கு அணியாய் அழகு தருகிறது. அந்நிலையில், அதன் உருவும் ஒளியும் கண்டு, அதைப் பாராட்டும் மக்கள், அது பிறந்த கடலையும் பாராட்டுகின்றனர். மக்கள் முயன்று மூழ்கிக் கடலடியிற் புகுந்து, அம்முத்துக் களை வாரிக்கொணராராயின், அவை ஆழ்ந்த அக்கடலடி யின் இருண்ட இடத்திலே, சிப்பிகளுக்குள்ளே கிடந்து, மாசு படிந்து, மங்கி மாண்டுபோம். அதனால் அது தோன்றிய கடலுக்கும் பயன் இல்லை; அதற்கும் புகழ் இல்லை; அதை அணிந்து அழகு பெறுதலை மக்களும் இழப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/74&oldid=822329" இலிருந்து மீள்விக்கப்பட்டது