பக்கம்:பாலைச்செல்வி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புலவர் கா. கோவிந்தன் மறையுமாறு போட்ட இலைகள் குவியல் குவியல்களாய்ப் பரந்து கிடக்கும் கொடுமை மிக்கது. அவ்வழியில், கோடையின் கொடுமையால், நீர் வறண்டு கிடக்கும் சுனைகளைத் தேடி வரிசையாக வந்தடைந்த நீர் வேட்கை மிக்க யானைகள், நீர் உண்ண வேண்டி நீட்டிய தம் கைகளை, ஆங்குத் தேங்கிக் கிடக்கும் சிறிது நீரும், வெய்யிலின் வெப்பத்தால் வெந்நீராய் மாறிச் சுட்டதால், துன்புற்று, அத்துன்பமிகுதியால், வரிசையாகச் செல்லும் தம் வழக்கத்தை மறந்து, நாலா திசைகளிலும் சிதறி ஓடி மலைச் சாரல்களெல்லாம் திரிந்து உழலும். அவை அவ்வாறு திரிந்தமையால் ஏற்பட்ட புதுவழிகள் பல தோன்றும் பொல்லாங்கு நிறைந்தது நீ செல்லும் அப் பாலைவழி. நின் பிரிவால், நின் அன்பை இழந்து, அதற்கே வருந்தும் இவள், அப்பாலை வழியில் செல்லும் நீ, ஆங்கு அடையும் அல்லலையும் அறியின், எவ்வாறு உயிர் கொண்டு வாழ்வள்? அவள் வருந்துவாள் என்பதை அறிந்தும், அவளை விடுத்துப் பிரியத் துணியும் நின் உள்ளம் என்ன, கல்லினும் வலிதோ? "அன்ப! அவள் வருந்துவள், வாழ்விழப்பள் என்பது ஒருபுறம் கிடக்க, நீ இப்போது பிரிந்து போவது அற நெறியும் ஆகாது. பொருள் தேடிப் போகும் நின் போக்கு பொருந்துவதுமாகாது. திரைகடல் ஒடித் தேடிப்பெற வேண்டிய செல்வத்தைத் தேடிப் பெறுவதிலேயே இன்பம் உளது. அவ்வாறு தேடிக் கொணரும் பொருளே இன்பம் தரவல்லது! என்று கருதுகின்றனை நீ. ஆனால், உண்மை அதுவன்று. இடையறவு இல்லா இன்பம் வேண்டின், அதற்குப் பொருள் வேண்டும். ஆகவே, அத்தகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/96&oldid=822358" இலிருந்து மீள்விக்கப்பட்டது