பக்கம்:பாலைப்புறா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 பாலைப்புறா

அடுத்தபடியாய் எல்லோரையும் பார்த்து விட்டு ஒட்டு மொத்தமாய்க் கும்பிட்டான். ஒரு ஒரமாய் ஒதுங்கி நின்ற வேலைக்காரச்சிறுமி மீனாட்சியின் அருகில் போய், அவள் கையைப் பிடித்தபடியே ‘மீனாக்குட்டி... ஒனக்கு அமெரிக்காவில் இருந்து, இந்த அண்ணா... என்ன வாங்கிட்டு வரணும்... சொல்லு’ என்றான். மீனாட்சி மேலாடையை கையால் கசக்கி, கண்களை கூச்சப்பட்டதுபோல் இயக்கிய போது, ‘ஒரு நல்ல துடைப்பக் கட்டையா வாங்கிட்டு வரச் சொல்லுவாள்’ என்று நிர்மலா சொன்னபோது ஒரே சிரிப்பு...

இதற்குள், குடியிருப்போர் சங்கத் தலைவர் நாராயணசாமியும், இதே மாதிரியான பெண்பால் பதவிக்கு ஒரு கண் போட்டிருக்கும் திருமதி பாலாநாராயணசாமியும், மனோகரின் கரங்களை ஆளுக்கு ஒருவராக பிடித்து கார் அருகே கொண்டு வந்தனர். பாலம்மா... கார்க்கதவைத் திறக்க, நாராயணசாமிகள் ஏறிக் கொண்டு, மனோகரை உள்ளே கூப்பிட்டார்கள். மோனிகாவால் பொறுக்க முடியவில்லை. கலைவாணியைப் பற்றிக் கவலைப்படாமல்... என்ன இது... வயதுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது எவ்வளவு உண்மை...

‘மாமி நீங்களும், மாமாவும் இறங்குங்கோ... கலைவாணி ஏறிக்கட்டும்...’

‘இடமிருக்கே... வா... கலைவாணி’

‘அவங்க சின்னஞ்சிறிசுங்க... மூன்று மாதத்துக்கு... ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் இருக்கப் போறவங்க... கடைசி நேரத்தில... கார்லே ஃப்ரியா போகட்டும்... நீங்க இறங்கி, ஒங்க கார்ல போங்கோ மாமி... நானும் வேணுமுன்னால் துணையாய் வாரேன்!”

கலைவாணி, வேறு சந்தர்ப்பமாக இருந்தால், நயத்தகு நாகரீகம் கருதி, மோனிகாவை செல்லமாய் அதட்டி இருப்பாள். ஆனால் இப்போது, அப்படி அவளைத் தட்டி கேட்க மனமில்லை... நாராயணசாமிகளுக்கே இது தெரிந்திருக்க வேண்டும்.

திருமதி பாலாநாராயணசாமியும், அவள் பெயருக்கு பின் பெயர் கொண்டவரும், காரின் அடுத்த கதவைத் திறந்து, மறுபக்கமாகத் துள்ளியபோது, மோனிகா, ஒரு புன்னகையோடு, மனோகரைப் பார்த்தாள். பிறகு, கலைவாணியை காருக்குள் தள்ளி விட்டாள். மனோகர், காருக்குள் நுழையப் போனபோது, திருமதி கல்யாணராமன் தன் பேரனை நியூயார்க்கில் பப்பல்லோ பல்கலைக்கழகத்தில், ‘எம்.எஸ்.' படிக்க வைக்க திட்டமிட்டிருப்பதை நினைத்தபடியே, அந்தப் பேரன் பிரியாராமனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/100&oldid=1405097" இலிருந்து மீள்விக்கப்பட்டது