பக்கம்:பாலைப்புறா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 101

மனோகர் முன்னால், பூனைமாதிரி நடக்கவிட்டு மாமாவுக்கு, பிளசன்ட் ஜர்னி விஷ் பண்ணுடா என்றாள். அந்தப் பிரியா ராமனோ, அப்போதும் மனோகரின் தலைக்கு அப்புறமாய் கண்களை ஏவிவிட்டு, குதிகாலில் நின்றபடி, ஒருத்தியை சைட் அடித்தான். அதற்குள், சியாமளா, இடுப்புக்குள் வைத்திருந்த ஒரு எலுமிச்சம் பழத்தின்மேல் கற்பூரம் ஏற்றி, மனோகர் முகத்துக்கு முன்னால் மூன்று தடவை சுற்றி, இந்த மூன்று சுற்றுக்களிலும், தனது யூஸ்லஸ் கணவனின் அமெரிக்க எதிர்காலத்தை அடக்கி வைத்திருப்பதுபோல், கரங்களை, ஏரோப்பிளேன் மாதிரி சுற்றவிட்டாள். பிறகு ‘திருஷ்டியை நீக்கிடும்’ என்று கையில் இருந்த ஒற்றை எலுமிச்சைப் பழத்தை தரையில் போட்டு மிதித்தாள். அக்கம் பக்கத்து பெண்களைப் பார்த்தபடியே, அந்தப் பழத்தை பீஸ் பீஸாக்கினாள்; இதனால், ஆண்கள் சந்தோஷப்படவில்லையானாலும், வருத்தப்படவில்லை. ஆனால் பெண்கள், ஆவேசப்பட்டார்கள். இந்த சியாமளா, திருஷ்டி கழித்து, தங்கள் கண்களுக்கு மாசு கற்பிக்கிறாளே என்றல்ல... இவளே, முண்டியடித்து, முக்கியத்துவம் பெற்று மனோகர் உபயத்தில், அமெரிக்கா போவதற்கு முன்னுரிமை பெறுகிறாளே என்ற ஆவேசம்

மனோகரை, அந்தக் கூட்டத்தில் அப்படியே விட்டால், அவனை ஏற்றிச் செல்லப் போகும் விமானம், அவன் இல்லாமலே, இரண்டு தடவை அமெரிக்கா போய்விட்டு வந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்ட கம்பெனிக்கார் டிரைவர், அந்த கண்டசா காரை கத்தவிட்டார். மனோகர், காரில் ஏறிக் கொள்ள, அந்தக் காரும், உருமி உருமி ஒடப் போனது. பதிலுக்கு பின்னாலும், முன்னாலும் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களும் உருமி காட்டின. ஒரு நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைக்குமே, அப்படி...

காரின் பின்னிருக்கையில், மனோகரின் தோளில், கலைவாணி சாய்ந்து கிடந்தாள். மயில் இறகில் செய்யப்பட்டது போன்ற அந்த இருக்கை சுகத்தைவிட, மனோகர் போட்டிருந்த கோட்டில், கரடுமுரடான தோள்பட்டை முடிச்சு, அவளுக்கு பெரும் சுகத்தைக் கொடுத்தது. அந்தக் கார், கிண்டி போகும் வரை, அவனோடு சிரித்துப் பேசியவள், கிண்டி திருப்பத்தில், தேசிய சாலையில் போனது போது, விசும்பத் துவங்கிவிட்டாள். கண்ணீர் தாரை தாரையாய் வெளிப்பட்டது. மனோகர், அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான். அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களை, தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டான். ஆனால், அவளோ, விசும்பலை அழுகையாக்கப் போனாள். மனோகரின் தோளிலேயே, தலையை லேசாய் முட்டிமுட்டி அழுதாள். இந்த மாதிரி சமாச்சாரங்களை கண்டு கொள்ளாத டிரைவர்கூட திரும்பி பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/101&oldid=1405098" இலிருந்து மீள்விக்கப்பட்டது