பக்கம்:பாலைப்புறா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 பாலைப்புறா

மனோகர். டிரைவர் பார்த்ததை, கலைவாணிக்கு, கண்களால் குத்திக் காட்டியதும், அவள், முந்தானையை சரி செய்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஒரு சின்னச் சிரிப்பை படரவிட்டாள். அந்தச் சிரிப்பு, கண்ணாடியில் பார்த்த டிரைவர் முகத்தில் ஒரு புன்னகையாய்த் தொற்றியது. ஆனாலும், கலைவாணி, மீண்டும் சத்தம் போடாமலேயே கண்ணிர் விட்டாள். மனோகர், மீண்டும் கைக்குட்டையால், அவள் முகம் முழுவதையும் துடைத்து, அதை ஈரத்தில் பளபளக்க வைத்தான். அதன் காரணத்தையும் குறிப்பிட்டான்.

"இந்தக் கைக்குட்டையை, என் முகத்தை துடைக்காமல், கசக்காமல், அப்படியே, அமெரிக்க மேஜையில் வைக்கப் போறேன்... ஏன்னா... இது என் காதல் ராசாத்தியோட பாசமழை. இன்னும் கொஞ்சம் அழேன்...”

‘நீங்களும் எனக்கு நினைவா ஏதாவது கொடுக்கணும்’

‘ஒன் வயிற்றத் தொட்டுப் பாத்துக்கோ!’

‘சீ... வெக்கமாயில்லே...?’

டிரைவருக்கு, வண்டி ‘ஒடிப்பது' சிரமமாய் இருந்தது. சாலையில் புற்றீசல் போல் பறக்கும் வாகனங்களுக்கு இடையே, இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தால், விவகாரம் விபத்தில் போய்விடும். முன் கண்ணாடியை கைக்குட்டை போட்டு மறைத்தால், பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க முடியாது. என்ன செய்யலாம்... சூடு சூட்டை தணிக்கும் என்பதுபோல், பேச்சுதான் பேச்சைத் தணிக்கும்.

"அம்மாவையும், கூட்டிக்கிட்டுப் போகலாமே... அழமாட்டாங்கல்ல?”

“ஏங்க... ஒங்களத்தான். ஏன் நாட்டுச்சிரிப்பாய் சிரிக்கறீங்க. டிரைவர். சார்! நான் அமெரிக்கா போகமுடியல்லியேன்னு அழல... மூன்று மாதம் இவரை விட்டுட்டு எப்படி... எப்படி..."

கலைவாணி, வெட்கம் விட்டு அழுதாள். மனோகர், தோழமையோடு அவள் தலையை தன் தோளில் சாய்த்தான். டிரைவருக்கு என்னவோ, ஏதோ போலிருந்தது. இப்படி வெளிநாட்டுக்கு போகும் கணவன்மாரை, வழியனுப்ப வரும் ‘மறுபாதிகள்' செக்கு, பேங்கு போன்ற விவகாரங்களைத்தான் பேசக் கேட்டிருக்கிறார். இப்படி உள்ளன்பாய் பேசுவது, ஒரு விதி விலக்கே, இப்போது அவருக்கே தான் எங்கே சாலை விதிகளை மீறிடுவோமோ என்கிற பயம்; அந்தப் பயம் கார் வேகத்தை நிதானப்படுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/102&oldid=1405099" இலிருந்து மீள்விக்கப்பட்டது