பக்கம்:பாலைப்புறா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 பாலைப்புறா

இல்லை என்கிற மாதிரி பேசி இருக்கப்படாது’.

மனோகர், கலைவாணியின் முகத்தை, அவளுக்குத் தெரியாமலே பார்த்தான். அவளோ, பின்புறமாய் கை திருப்பி, அவன் பிடரியை வருடி விட்டாள். அவனுக்கும் அளப்பரிய மகிழ்ச்சி... அவனைப் பரிசோதித்தவர்கள், கொம்பன் டாக்டர்கள். மூன்று மணி நேரம் சோதனை செய்தார்கள். ஒரு சின்ன இன்பெக்ஷனைக் கூட அவர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை... இருந்தால்தானே எடுத்துக்காட்ட? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

மனோகரும், கலைவாணியும், கார்களில் வந்திறங்கிய அடுக்குமாடி வாசிகள் அத்தனை பேரும் மொய்க்க, விமான நிலையத்திற்குள் நுழைகிறார்கள். அங்கேயும், அவன் ஒரு விஐபி ஆனான். கம்பெனியின் உதவிப் பொது மேலாளர் சூரிய நாராயணன் தலைமையில் ஒரு கம்பெனிப் பட்டாளமே காத்து நின்றது... பைஜாமா... சல்வார் கமிஸ் பெண்கள், சபாரிக்காரர்கள்... சூட்டு, கோட்டு ஜென்டில்மேன்கள்... உதடு பிரியாமல் பேசி, தோளை மட்டும் லாவகமாய் குலுக்கும் நவீனக்காரர்கள், காரிகள்...

சூரியநாராயணன், மனோகருக்கு பூச்செண்டு கொடுத்தார். நீட்டிய கையை, மனோகரின் கையோடு இணைக்கப் போனவர், திடீரென்று, அவனை தனது தோள்களில் குப்புறச் சாய்த்து, அவன் முதுகை தட்டிக் கொடுத்தார். அப்போது பலத்த கைத்தட்டல்; சுற்றி நின்றவர்களை சுண்டி இழுக்கும்... ‘ஹாய் ஹாய்’... ஒலிப்புகள். அப்போது பார்த்து ரத கஜ துரக பதாதிகளோடு உள்ளே நுழைந்த ஒரு மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கே, அவன் மீது பொறாமை ஏற்பட்டது. அவனையும், அந்தக் கூட்டத்தையும் உஷ்ணமாகப் பார்த்துவிட்டு, சிறிது தொலைவில் தலைமறைவாய் உள்ள வி.ஐ.பி. லவுஞ்சை நோக்கி மிடுக்காய் நடந்தார்.

பகல் நேரத்திலும், இரவு போல் ஜொலித்த விமான நிலையத்தை, கலைவாணி பராக்குப் பார்த்தாள். வெளியே வெயில் சுட்டெரிக்க, இங்கே அதற்கு எதிர் விகிதாச்சாரத்தில் ஒரு கிளுகிளுப்பு... இந்தியை ஆங்கிலமாகவும், ஆங்கிலத்தை இந்தி மாதிரியும் உச்சரிக்கும் அறிவிப்புகள்; சிவப்பு விளக்கும், பச்சை விளக்குமாய் பாளம் பாளமாய் ஜொலிக்கும் மேல்கூரை. கறுப்பும் வெள்ளையுமாய் கலந்து நின்ற பயணிகள், 'ஆகாய’ மனிதர்களை நின்ற இடத்திலேயே நிற்க வைத்து, அவர்களை, மேலேயும் கீழேயும் போக்குவரத்து செய்யும் எலிவேட்டர்கள்... இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளில், கால் மேல் கால் போட்டுக் கிடந்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்... பிள்ளைகளை குவாய்த்துக்கோ... சவூதி அரேபியாவுக்கோ வழியனுப்ப வந்து பிரிவுத் துயர் தாங்காமல் அழுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/104&oldid=1405101" இலிருந்து மீள்விக்கப்பட்டது