பக்கம்:பாலைப்புறா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

106

போய் ரெண்டு வார்த்தை பேசிட்டு வாங்க... ஒரு வயிறு எரிந்து... அதுல நம் வயிறு குளிரவேண்டாம். போங்க”

மனோகர்... வேண்டா வெறுப்பாய் போனான்.... முகத்தைத் திருப்பிக் கொண்ட சங்கரனின் மடக்கி வைத்த கையை வலுக்கட்டாயமாய்ப் பிடித்து குலுக்கினான். அவனிடம் இவன் ஏதோ பேச, அவன் ஏதோ பேச, மூன்று நிமிடத்தில் முடிந்துவிட்டது. மனோகர் மீண்டும், ஆங்காங்கே நின்றவர்களிடம் பேசியபடியே தற்செயலாய் நகர்வது போல் நகர்ந்து கலைவாணியின் பக்கம் வந்தான். ஒன் காட்ல மழை பெய்துடா என்று வெறுப்பாய்ப் பேசிய சங்கரனை, மனைவியிடம் விமர்சிக்கப் போகும்போது, ஒரு அறிவிப்பு ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒலித்தது. பாம்பே பிளைட்டுக்கு, செக்யூரிட்டி செக்கப் துவங்கிவிட்டதாம்... பயணிகள், உடனடியாய் உள்ளே போக வேண்டுமாம். பம்பாய் போய், அங்கிருந்து ஏர் இந்தியாவை பிடித்து... அப்புறம் அமெரிக்கா...

மனோகர், கடைசி முயற்சியாக, கலைவாணியிடம், அவசர அவசரமாய் பேசிக் கொண்டு இருந்தபோதே, உதவிப் பொது மேலாளர் சூரியநாராயணன், ஜூனியர்களோடு அங்கேயே வந்தார். அடுக்குமாடிக்காரர்களும் கூடிவிட்டார்கள். செக்யூரிட்டி செக்கப் மீண்டும் அறிவிக்கப்பட்டது. சூரிய நாராயணன், அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார். சகாக்கள் கை கொடுத்தார்கள். சங்கரன், பக்கத்தில் வந்து பட்டும் படாமலும் நினறான். மனோகர், கைகளைக் குலுக்கக் கொடுத்தாலும், அவனை எதிர்பார்த்து தனித்து நின்ற கலைவாணியின் பக்கம் கண்கள் தாவின. இதை புரிந்து கொண்ட சூரியநாராயணன், ‘போர்டிங், கார்ட்தான்... வாங்கியாச்சே... ஒய்ப்புக்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வா...’ என்று அவனிடம் பேசினார்.

மனோகர், கலைவாணி பக்கம் போனான். அவள் கணவனின் கரங்களைப் பற்றிக் கொண்டாள். அவள், கன்னங்கள் உப்பின... பின் உதடு நீண்டது. மூச்சு சத்தமானது... கஷ்டப்பட்டு, அழுகையை அவள் அடக்கிக் கொள்வது, தொலைவில் நின்ற சூரி உள்ளிட்ட அத்தனை பேருக்குமே புரிந்தது. மனோகர், அவசரஅவசரமாய் ஆலோசனை சொன்னான். அடிக்கடி டாக்டர் கிட்டே செக்கப் செய்துக்கோ... வேளாவேளைக்கு சாப்பிடு... நான் ஊட்டி விட்டால்தான்சாப்பிடுவேன்னு அடம் பிடிக்காமல்...

மனோகர், மனதை நிதானப்படுத்த, வேறு பக்கமாய் முகம் திருப்பினான். கலைவாணியும், அவனுக்கு, கடைசிநேர, கட்டளைகளை விடப் போனாள். சிகரெட்டுக்களை தனக்காக விட்டவன், தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லப் போனாள். பேசப் போன வாய்க்குள் நீர்க்குளம்... கண்ணிரோ... உமிழ்நீரோ... அவன் கைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/106&oldid=1405103" இலிருந்து மீள்விக்கப்பட்டது