பக்கம்:பாலைப்புறா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

சு. சமுத்திரம்

பிடித்துக் கொண்டு விம்மினாள். உடனே, மனோகர் பிடிபட்ட தன் கரங்களாலேயே அவள் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

இதற்குள் விமானம் ஆயத்த நிலையில் இருப்பதாக ஒரு அறிவிப்பு... சூரிய நாராயணனே, அங்கே வந்து, மனோகரை கூட்டிக் கொண்டு போய், செக்யூரிட்டி ஜோன் வரைக்கும் சென்றார். கலைவாணி, உள்ளே போன கணவனைக் கண்டுபிடிக்க முடியாமல், அங்கேயும், இங்கேயுமாய் கண்களைச் சுழற்றியபோது, சியாமளாதான், அதோ பார் என்று இவள் மோவாயை மேலே நிமிர்த்தினாள். கலைவாணி, எக்கி எக்கிப் பார்த்தாள். அன்புக்குரியவன், மூன்று மாதம் முகம் காட்டாமல் இருக்கப் போகிறவன், முட்படிகளில் நின்றபடியே, மேலே மேலே போகிறான். பரலோகத்திற்கு போவது போல் போகிறான். அவளுக்கு... அவளுக்கு மட்டுமே கையாட்டி, கையாட்டி, ஒரு அசுரக் கோட்டைக்குள் மறைகிறான்.

கலைவாணியை, மோனிகாவும், சியாமளாவும் தாங்கிக் கொள்கிறார்கள். பாலா மாமியும், திருமதி கல்யாணராமனும் பக்கத்தில் வந்து நிற்கிறார்கள். பிறகு, அவளை ஆளுக்கொரு கையாகப் பிடித்தபடி, அங்கிருந்து நடந்து, விமானநிலையத்திற்கு வெளியே வரும் போது -

டாக்டர் சந்திரா கையில் ஒரு சூட்கேஸோடு உள்ளே நுழைகிறாள். கலைவாணியைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் தாங்காமல், ‘கலை... கலைவாணி' என்று அவள் கையைப் பற்றுகிறாள். கலைவாணிக்கும், சோகம் பின்னுக்குப் போகிறது. பெருமிதம் முன்னுக்கு வருகிறது.

"என் ஹப்பி. நியூயார்க் போறார் டாக்டர்...!”

‘சுகமா இருக்கியாம்மா...’

‘என்னைப் பார்த்தாலே, தெரியலியா டாக்டர்... எப்படி குண்டாயிட்டேன் பாருங்க... நீங்க எங்கே இப்படி டாக்டர்...’

"டில்லிக்கு.. போறேன்... எய்ட்ஸ் சம்பந்தமா ஒரு கான்பரன்ஸ்’ என்னை செலக்ட் செய்திருக்காங்க...”

‘கன்குராஜுலேஷன்... டாக்டர்’.

‘எனக்கும், கண் கெட்ட பிறகுதான்... சூரியநமஸ்காரத்தை சொல்லிக் கொடுக்காங்க... வாறேம்மா... உடம்பை நல்லா பார்த்துக்கம்மா... சத்துணவா சாப்பிடு...’

‘வீட்டுக்கு வாங்களேன் டாக்டர். இந்தாங்க விசிட்டிங் கார்ட்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/107&oldid=1405104" இலிருந்து மீள்விக்கப்பட்டது