பக்கம்:பாலைப்புறா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 பாலைப்புறா

டாக்டர் சந்திரா, கலைவாணியை மருவி மருவிப் பார்த்தபடியே உள்ளே வந்தாள்... அவளுக்காக, காத்து நின்ற மாமா மகன் சங்கரை, அக்கம் பக்கம் பார்த்து தலையில் குட்டினாள். அவன் வழக்கம் போல் சிரிக்காமல், வாடிப் போய் நின்றான்.

‘என்னத்தான்... ஒரு மாதிரி இருக்கீங்க... ஒங்க பாரின் டிரிப் என்னாச்சு...’

‘கடைசி நேரத்துலகால வாரிட்டாங்க... எனக்குப் பதிலாய்... நீ வாசல் பக்கமாய் பேசிட்டு நின்னியே... கலைவாணியோ... கொலைவாணியோ அவளோட ஹஸ்பன்ட் போறான்... எனக்கு ஜூனியர் பயல்...’

‘அட கடவுளே... என்ன காரணமாம்...’

"காரணமாவது... கத்திரிக்காயாவது... டெப்டி ஜெனரல் மானேஜருக்கும், எனக்கும் பிடிக்காது... அதுதான் உள் காரணம். ஒன்னைப் பார்க்க வாரதுக்காக டைபாய்டுன்னு சும்மா ஒப்புக்கு ஒரு சர்டிபிகேட் வச்சு மெடிக்கல் லீவ் போட்டேன். அந்த இல்லாத டைபாய்டையே அவங்க எனக்கு எதிராய் திருப்பிட்டாங்க.”

‘அப்போ... எய்ட்ஸ் கிருமிகள். இருக்கிறவரை மட்டும் அனுப்பலாமா...?’

"நீ என்ன சொல்றே?”

"ஒன்னும் இல்ல... மாமா... அத்தை எப்படி இருக்காங்க!”

டாக்டர் சந்திரா, நாக்கை கடித்தாள். பேச்சை வேறு பக்கமாய் மாற்றப் போனாள். சங்கருக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அவள், மனோகர் சம்பந்தப்பட்ட ஒன்றை மறைக்கப் பார்ப்பது புரிந்தது. இல்லையானால், எந்த மாமா - அத்தை வீட்டில் இருந்து இப்போது இங்கே வந்தாளோ, எவரிடம் நேற்று ராத்திரி முழுக்க அரட்டை அடித்தாளோ, அந்த மாமா. அத்தை பற்றி கேட்டிருக்க மாட்டாள். சங்கரன், அவளை, கேன்டீன் பக்கமாய் கூட்டிப் போனான்.

"என்ன பராக்கு பாக்கே...?”

"என்னோட வரவேண்டிய அசோகனை இன்னும் காணலையே...”

சங்கரன் சங்கடப்பட்டான். மனதிற்குள்ளே மனோகரைப் போல் அசோகனைக் கொன்று போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/108&oldid=1405105" இலிருந்து மீள்விக்கப்பட்டது