பக்கம்:பாலைப்புறா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 பாலைப்புறா

கேட்கமாட்டான். வரட்டும்... வரட்டும். வீட்டுக்கு வரட்டும்...

சென்னை நரகத்தின் நகரமான அண்ணா நகரில், ஒரு மூலையில், பெரிதாகவோ, சிறிதாகவே, இல்லாத சராசரி வீட்டின் முன்னால் கார் நின்றதும், சந்திரா துள்ளிக் குதித்து கீழே இறங்கினாள். வாசலுக்கு வந்துவிட்ட அத்தையைப் பற்றிக் கொண்டாள். அந்த முத்தமும் இந்தப் பற்றுதலும், குடும்பத்தை நண்டும் சிண்டுமாய் விட்டுட்டு, மாரடைப்பால் தந்தை மரணமானபோது, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்த தாய் மாமாவுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது. மாமாவின் பேருதவியை, முணுமுணுக்காத - இன்னும் சொல்லப் போனால், உறுதுணையாக நின்ற இந்த அத்தைக்கு, தான் மனமுவந்து மருமகளாய் ஆகப் போகிற பழைய உறவின் புதிய பதிப்பை, சமிக்ஞையாக்குவது போல் இருந்தது. மாமா... மெளனச் சுகத்தோடு, தங்கை மகளைப் பார்த்தபோது, அத்தை கேட்டாள். ஜாக்கெட்டுக்கு மேல் உல்லன் ஸ்வட்டரை தொட்டுப் பார்த்துக் கேட்டாள்.

‘இந்த வெயிலுல... எப்படித்தான் இதை போட்டிருக்கியோ’

“இங்கதான் வெயிலு. டில்லியில் ஒரே குளிரு... எல்லாரும் கம்பளிப் போட்டு போட்டு உயரமான எஸ்கிமோக்கள் மாதிரி அலையறாங்க. நான்கூட, உடம்பிலே பேண்டேஜ் போட்டது மாதிரி... கம்பளி ரஜாய் இதுங்கள இரவிலே சுத்திக்கிட்டேன்..."

‘ஒனக்கு வேற உதாரணமே கிடைக்காதே... சரி... சரி... உள்ளே வா. உடனே போகணுமுன்னு காலுல ஊசியை குத்திட்டு நிற்காதே’

சந்திரா, மாமாவை சிரிப்போடு பார்த்துவிட்டு, உள்ளே போனபோது, சங்கரன் சூட்கேசோடு உள்ளே வந்தான். சந்திரா, சமையலறைக்குள் போன அத்தையிடம் எத்தே பிளைட்டுலேயே டிபன் கொடுத்துட்டாங்க. ஒரு கப் காபி மட்டும் போதும் என்றாள்.

மாமா, ஒரு படிப்பாளி... கண்டதைப் படிப்பவன் பண்டிதன் என்பதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறவர். கண்டது என்பது அவரது அகராதிப்படி கவர்ன்மென்ட் சர்வன்ட் காண்டக்ட் ரூல்ஸ், கவர்மென்ட் செர்வென்ட் லீவ் ரூல்ஸ் போன்றவைகளே... இவை சம்பந்தப்பட்ட நீதி மன்றத் தீர்ப்புக்களும் அவருக்கு அத்துபடி. அதனாலயே ஒய்வு பெற்ற இந்த டெப்டி செகரட்டரியிடம ‘ஐடியா வாங்க பல அதிகாரிகளும் ஊழியர்களும் வருவதுண்டு... இப்போதுகூட, மெடிக்கல் லீவில் இருப்பவனை சஸ்பென்ட் செய்ய முடியுமா என்று கேட்க, ஒரு செக்ஷன் ஆபீசர் பயபக்தியோடு நிற்கிறார். ஊழல் விசாரணையிலோ அல்லது வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/110&oldid=1405107" இலிருந்து மீள்விக்கப்பட்டது