பக்கம்:பாலைப்புறா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 111

விசாரணையிலோ சஸ்பென்டான தனக்கு, டிபன்ஸ் அசிஸ்டென்டாக வர வேண்டும் என்று காலில் விழுந்து கும்பிட்டுக் கேட்க, ஒரு தாடி மீசைக்காரர் வந்திருக்கிறார். அவர் தாடியைப் பார்த்தால், அவர் சஸ்பென்டாகி மூன்று மாதம் ஆகியிருக்கலாம்.

மாமா... கவர்ன்மென்ட் செர்வன்ட்ஸ் உலகிற்குள்ளும், அத்தை சமையல் லோகத்திற்குள்ளும் ஒன்றிப் போனபோது, சங்கரன், அவசர அவசரமாய் டையை சரி செய்து கொண்டே, நேரமாயிட்டு நான் வாறேன்! என்று வரவேற்பு அறையையே சுற்றிச் சுற்றி வந்தான்... உடனே... சமையலறையில் இருந்து ஒரு அதட்டல்.

‘இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடேண்டா... நீதான் கம்பெனியை தலையில் தூக்கிட்டு ஆடுறது மாதிரி... நீ கோணச்சத்திரம் போகும் போது, சந்திரா ஆஸ்பத்திரிக்குப் போனால், உனக்கு எப்படி இருக்கும்...’

‘அப்படியும் இவருக்கு உறைக்காது... அத்தே... என்னையா பார்க்க வரார். அவரு அத்தையத்தான் பார்க்க வரார். இன்றைக்காவது தாய் சொல்லைத்தட்டாத தடியனாய் இருங்களேன்...’

சந்திரா, உள்ளே நிற்கும் அத்தையிடம் சத்தம் போட்டுப் பேசிவிட்டு, இங்கே நிற்கும் மாமாமகனிடம் ரகசியம் பேசுவது போல் பேசினாள். பிறகு, அவனை, தனது அறைக்குள் வரும்படி கண்ணடித்துவிட்டு, உள்ளே போனாள். அவன் வருவது வரைக்கும் போவதில்லை என்பது போல், அந்த அறையில் வாசலிலேயே நின்றாள். அப்படியும் வராமல் டெலிபோனைக் குடைந்து கொண்டிருந்தவனை ஒடிப் போய் பிடித்து, அறைக்குள் இழுத்துக் கொண்டு போனாள். அவள் கட்டிலிலும், அவன் ஒரு நாற்காலியிலும் உட்கார்ந்து கொண்டார்கள்.

சந்திரா, ஒரு குழந்தைக் குதூகலத்தோடு, டில்லி அனுபவத்திற்கு ஒரு முன்னுரை வழங்கினாள்.

‘விமானத்தில போனது இதுதான் முதல் தடவையா... உயிரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கையிலே இருந்தேன். பிளேன் ஒடிட்டு... அப்புறம் தூக்கலாய் போய் பிறகு நேரா ஆகாயத்தில தாவும் போது தல சுற்றிட்டு, காதுகளில் ஒரேவலி, அதோட அடைப்பு... நல்லவேளை டாக்டர் அசோகன், பக்கத்தில இருந்ததால், தப்பிச்சேன்’

‘அந்த கிராக்கனை விடு... ஆனாலும் நீ கொடுத்து வச்சவள். எத்தனையோ பெரிய டாக்டருங்க இருக்கும் போது, ஒன்னை செலக்ட் செய்திருக்காங்க பாரு...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/111&oldid=1405109" இலிருந்து மீள்விக்கப்பட்டது