பக்கம்:பாலைப்புறா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

சு. சமுத்திரம்

மியூசிக் பாடகர் மெர்குரி, முன்னாள் டென்னிஸ் விம்பிள்டன் சேம்பியன் ஆர்தர் ஆஷ். இவங்கல்லாம், எய்ட்ஸ் நோய்க்கு பலியானங்க. இவர்களுக்காக கண்ணிர் வடிக்கும் உலகம், இவர்களோடு பழகி எய்ட்ஸ் நோயை வாங்கி கட்டிக்கொண்ட அப்பாவிப் பெண்களைப்பற்றி ஏன் மூச்சு விடுவதில்லை. என்று டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினோ நவரத்திலோவா மட்டுமே கேட்டார். உண்மைதான். பெண்களாகிய எங்கள் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி... ஆண்களின் தகாத உறவுகளில் அகப்பட்டு சாவது தெரியாமலேயே சாவது அப்பாவிப் பெண்கள்தான்.”

"புலம்பாதே..அந்த ஆணுக்கு நோயைக் கொடுத்ததே ஒரு பெண்தானே? இந்த நோய் புதுசுன்னா...எப்படி வந்திருக்கும்?”

‘புராணக்கதை மாதிரி நீளும், இதுலயும் ஒரு அரசியல் சமூக உள்நோக்கம் இருக்குது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒருவித பச்சைக் குரங்குகளுக்கும் இந்த நோய் இருந்ததாயும், இந்த குரங்குகளுக்கு முத்தம் கொடுத்த, ஆப்பிரிக்கா பெண்கள் இதை... தங்கள் மூலமாய், உலகம் முழுவதும் பரவவிட்டதாகவும் ஒரு கதை. ஏற்கனவே நொந்து போன ஆப்பிரிக்க மக்களை கொச்சைப்படுத்த வெள்ளையர் விடுத்த கட்டுக்கதை... இன்னொன்று, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்க மக்களை, மேம்பட விடாமல் செய்வதுக்காக உருவாக்கப்பட்ட பயலாஜுக்கல் ஆயுதமுன்னு ஒரு கதை. அணுஆயுத பரிசோதனைகளால் ஆகாயத்தில் ஏற்பட்ட காற்று மண்டல மாற்றத்தால் ஏற்பட்டதுன்னு வேறு ஒரு கதை... கதை கதையாகவே இருக்கலாம்...ஆனால் இந்தக் கிருமிகள் மட்டும் நிசம்...’

"கடைசியாய் ஒன்று சந்திரா. இந்த நோய் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்குமாம்”.

‘ஆரம்பக் கட்டத்தில சிலருக்கு விடாமல் காய்ச்சல், வயிற்றுப்போக்கு இருக்கும்.ராத்திரி வேளையில் வியர்வை கொட்டும்; உடம்பில் சிவப்புப் சிவப்பாய் சில தடிப்புகள் வரலாம்.’

சங்கரன், அவளைப் பயந்து பார்த்தான். அவள் குறிப்பிட்ட இந்த அறிகுறிகள், ஒரு வாரகாலமாய் அவனிடமும் உள்ளன. ஆனாலும் யாரிடமும் எந்த உறவையும் வைத்துக் கொள்ளாததை நினைத்து, தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். கூடவே, முடிவெட்டும் போதோ, முகச்சவரம் செய்யும் போதோ.. வந்திருக்கலாமோ என்ற சந்தேகம், இப்போதும் வியர்வை கொட்டப் போனது. வயிற்றுக்குள் ஏதோ உருண்டது. முதுகில் உள்ள சிவப்பு தடிப்பில் வலியெடுத்தது.

இதை வேறு விதமான அர்த்தப்படுத்திக் கொண்டே, சந்திரா சிரிப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/115&oldid=1405113" இலிருந்து மீள்விக்கப்பட்டது