பக்கம்:பாலைப்புறா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 பாலைப்புறா

குறும்புமாய் கேட்டாள்.

‘என்னடா இந்த மக்குப்பெண்ணுக்கு இவ்வளவு விலாவாரியாய் விஷயம் தெரியுதேன்னு நினைச்சிங்களா...? மூன்று நாள் கான்ப்ரன்ஸ் ஆச்சே. அவங்க எய்ட்ஸ் சம்பந்தமாக கொடுத்த எல்லா லிட்டரேச்சரையும் கரைச்சுக் குடிச்சிட்டேன். எதுலயும், விசுவாசம் இருந்தால், ஒரு முட்டாள் கூட அறிவாளி ஆகலாம். அது இல்லாட்டால் அறிவாளி கூட முட்டாளாகலாம், நீங்க எதுலே சேர்த்தி’

சங்கரன், அவளை பார்க்காமல், அந்த டெலிபோனை பார்த்தான். அலுவலகத்திற்கு விடுமுறை என்று சொல்ல வேண்டும். விறைப்பாய் எழுந்து, டெலிபோன் எண்களைச் சுழற்றினான். ‘இன்றைக்கு மட்டும் என்று சொன்னான், பிறகு அப்படியா! ஐஸி! ஓகோ கம்பெனிக்கு நல்ல மூக்கறுப்பு, வேணும்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறையைப் பற்றிச் சொல்லாமலே, டெலிபோனை வைத்துவிட்டு, சந்திராவிடம் வந்து ஆனந்தப்பள்ளு பாடினான்.

‘கடைசியிலே கெடுவான் கேடு நினைப்பான் என்பது சரியாப் போச்சு. நியூயார்க் விமான நிலையத்திலேயே, மனோகர் பயலை செக்கப் செய்திருக்காங்க.அவனுக்கு ஹெச்.ஐ.வி. - அதுதான் எய்ட்ஸ் இருக்கிறதை கண்டுபிடித்தாங்களாம். உடனடியா பிளைட்ல திருப்பி அனுப்புறாங்களாம்.’

டாக்டர் சந்திரா முகம் கறுத்தது. விமான நிலையத்தில், மஞ்சளும், குங்குமமாய் பார்த்த கலைவாணியின் முகம், தனது முகத்தோடு முகமாய் முட்டியது. இது தெரியாமல், சங்கரன் மேலும் கடுப்படித்தான்.

‘நீ ஏர்போர்ட்ல சொல்லும் போதே எனக்கு சந்தேகம். கடைசில கம்பெனிக்கு சரியான செருப்படி...என்னை ஒரம் கட்ட நினைத்த எங்க கம்பெனிய, எல்லாரும் ஒரம் கட்டுவாங்க. நியாயம், லேட்டானாலும், ஜெயிக்கத்தான் செய்யுது...’

"சட்-அப்... வாயை மூடுங்க... நீங்கல்லாம் ஒரு மனுஷனா?”

சந்திரா, கத்திய கத்தலில், அவள் மாமாவும், அத்தையும் அங்கே வந்துவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/116&oldid=1405114" இலிருந்து மீள்விக்கப்பட்டது