பக்கம்:பாலைப்புறா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில், ஏதோ ஒரு வீட்டில் திருமிகு சந்திரசேகர், தொலைக்காட்சிப் பெட்டியில், தாடியும் மீசையுமாய் பிரதமராய் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகளை ஒரம் கட்டாமல் ரசித்துப் பார்க்கும் கலைவாணியோ...

முகம் வீங்கிக் கிடந்தாள். செங்குத்தாய் உயர்ந்த குத்துக் கால்களில் முகம் போட்டு அந்தக் கால்களுக்கும், கையால் கட்டுப் போட்டுக் கிடந்தாள். முந்தானை, கால்களுக்குத் திரையானது. முடிக்கற்றைகள் நெற்றியில் இருந்து மூக்குவரை பரவி, அவள் முகம், சன்னமான இரும்புக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டது போன்ற தோரணை... அவள் உடம்புக்குள்ளேயே, ஒருவித பம்பரச் சுற்று; உள்உறுப்புகள் கழன்று போனது போன்ற பிராணவாதை, எலும்பிலும், சதையிலும் இவற்றைக் கட்டிப்பிடிக்கும் நரம்பிலும், எங்கும் பல்கிப் பரவி ஒடும் குருதியிலும் உள்ள அத்தனை அணுக்களும் ஒன்றை ஒன்று பிய்த்துக் கொண்டு, வெளியேறத் துடிப்பது போன்ற இயக்கம். இணைந்து நின்றவை, எதிரிகளாய் ஆனது போன்ற எதிர் இயக்கம்... ஆனாலும் நேரம் ஆக ஆக, மனோவலி, உடல் வலியை வெல்ல, கலைவாணி மரத்துப் போய்க் கிடந்தாள். அவள் காலடியில் கிடந்த பத்திரிகைகள், பக்கம் பக்கமாகச், சிதறி, மின்சார விசிறியில் அவளைக் கேலிச் செய்வது போல், துள்ளித்துள்ளிக் குதித்தன. 'எங்களைப் பார் எங்களைப் படித்துப் பார்,’ என்று சலசலப்பாய் சத்தமிட்டன. தமிழ்ப் பத்திரிகைகளோ கட்டம் போட்ட செய்தியை காட்டிக்காட்டி காற்றில் அடக்கமாய் ஆடின. இந்த மனோகரை அகில உலக கவனத்திற்கு கொண்டு போன செய்தி... நியூயார்க் விமான நிலையத்தில், அவனுக்கு நடத்தப்பட்ட எய்ட்ஸ் சோதனையை, ராய்ட்டரோ அல்லது வேறு ஏஜென்சியோ சுற்றுக்குவிட, அதை இந்திய ஏஜென்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/117&oldid=1405115" இலிருந்து மீள்விக்கப்பட்டது