பக்கம்:பாலைப்புறா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

சு. சமுத்திரம்

துறையில் ஆலோசனை வழங்கும் கான்டிராக்டைப் பெற்றுக் கொண்ட சாதனையை சுட்டிக்காட்டி, அதை அங்கே சென்று நிறைவேற்றுவதற்காக ஐந்து பொறியாளர் கொண்ட குழுவை அனுப்பி இருப்பதாகவும், ‘தடபுடலாக' ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தது. இந்த ஐந்து உறுப்பினர்களின் புகைப்படங்களையும், செய்தியாளர்களிடம் கொடுத்திருந்தது. மேகங்கள் ஒரு சதுர மீட்டருக்கு ஆறு வாட்ஸ் பெறுமான சூரிய வெளிச்சத்தை உள் வாங்கிக் கொள்கின்றன என்ற பழைய அடிப்படையில், வானிலை, கணிக்கப்பட்ட காலம் போய், இந்த மேகங்கள் இருபத்தைந்து வாட்ஸுக்கும், அதிகமாக சூரிய வெப்பக் கதிர்வீச்சை உள்வாங்குகின்றன என்ற புதிய கண்டுபிடிப்பிற்கு ஏற்ப, அந்த பன்னாட்டுக் கம்பெனிக்கு, வானிலையை, புதிய முறையில் கணிக்கும் கம்ப்யூட்டர் மாடல்கள் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டியும், இதற்காக இந்த இந்தியக் கம்பெனியை, அந்த நிறுவனம், ஆலோசனை நிறுவனமாய் நியமித்திருப்பதையும் விளக்கும் இரண்டு பக்கக் குறிப்பு ஒன்றும், செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது... இதை நியூயார்க்கில் இருந்து கால் போட்ட மனோகர் மூலமே தெரிந்து கொண்ட கலைவாணி, அன்றும், அதற்கு முந்தின தினமும், வீட்டிற்கு வழக்கமாக வரும் இந்து பத்திரிகை தவிர, இதர பத்திரிக்கைகளையும் மீனாட்சி மூலம் வரவழைத்தாள். நேற்று எந்தச் செய்தியும் வரவில்லை. இன்றைக்காவது வந்திருக்கும் என்றுதான் மீனாட்சியை அனுப்பினாள். கணவனின், புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்க்க அப்படி ஒரு துடிப்பு... ஐவரில் அர்ச்சுனனாகக் கருதப்படும் கணவனை, அவன் வாழ்க்கைக் குறிப்போடு பார்ப்பதற்காக, மீனாட்சி கடையில் இருந்து வருவதற்கு முன்பே, வீட்டுக்கு வெளிப்பக்கமாய் உள்ள சிட் அவுட்டில்: நின்று கீழே எட்டிப் பார்த்தாள். அந்த வேலைக்காரச் சிறுமியை, கீழே பார்த்ததுமே, அங்கிருந்தபடியே அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டு, ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று கையாட்டினாள். லிப்ட் பக்கமாய் ஒடிப் போனாள். அதிலிருந்து இறங்கிய மீனாட்சியின் கைப்பிடித்த பத்திரிகை மொந்தையை, வழிப்பறி செய்வதுபோல் பறித்துக் கொண்டு, அங்கு நின்றபடியே புரட்டினாள். புரட்டப் புரட்ட... அந்த கம்பெனியின் சாதனையை, எய்ட்ஸ் கலவையோடு படிக்கப்... படிக்க... அவளைத்தான் யாரோ... எதுவோ புரட்டுவது போல் இருந்தது.

கலைவாணி, எப்படித்தான் வீட்டுக்கு வந்தாளோ... இருண்டு போன கண்கள் எப்படித்தான் வீட்டைக் கண்டுபிடித்தனவோ,... துவண்டு போன கால்கள் எப்படித்தான் நடந்தனவோ, இதுதான்நம் வீடு என்று 'பெருச்சாளி’ பிடித்த மூளை எப்படித்தான் கண்டுபிடித்ததோ... பார்வை அற்றோர் வைத்திருக்கும் ஊன்றுகோல் போல, அங்கும் இங்கும் ஒருகை ஆட, மறுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/119&oldid=1405117" இலிருந்து மீள்விக்கப்பட்டது