பக்கம்:பாலைப்புறா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 பாலைப்புறா

தலைக்கு மேல் போக, கால்கள் பழக்கதோஷத்தில் தள்ளாடி, அல்லாடி அவளை சுமந்து செல்ல, கலைவாணி, கட்டிலில் போய் தொப்பென்று விழுந்தாள். அதை இறுகப் பிடித்து, அவள் குப்புறக் கிடந்தாள். வேலைக் காரச் சிறுமிக்குக் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை... எக்கா... எக்கா என்று அந்தக் கட்டிலையே சுற்றிச் சுற்றி வந்தாள்... கிராமங்களில், கட்டிலில் போட்ட பிணத்தைச் சுற்றி வருவார்களே, அப்படி, கலைவாணி, அடிக்கடி எழுவதும், அந்தப் பத்திரிகைச் செய்தியைப் படித்துப் பார்த்து, கசக்கிப் போட்டுவிட்டு, படுக்கையிலேயே மீண்டும் விழுவதுமாக இருந்தாள். மீனாட்சி, பயந்து போனாள். அக்கம் பக்கத்துப் பெண்களை வரவழைப்பதற்காக, வாசலுக்கு வந்தாள். ஆனாலும், அவள் படிதாண்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சியாமளா... மோனிகா... பாலா நாராயணசாமி, வேதாப்பாட்டி... திருமதி. கல்யாணராமன், திருமதி எட்வர்ட் சாமுவேல் எல்லோருமே வந்து விட்டார்கள். எவரெல்லாம், இந்தக் கலைவாணியின் வீட்டில் பக்கடாவைச் சுவைத்துக் கொண்டே, பெண்கள் சங்கம் அமைப்பது பற்றி ஆலோசிக்க வந்தார்களோ, அவர்களில் திருமதி நாகராஜன் தவிர அத்தனை பெண்களும் வந்துவிட்டார்கள். முகத்தில் பெளடரை அப்புவது போல், அனுதாபம் அப்ப, கவலையோடுதான் காணப்பட்டார்கள். சியாமளா ‘அய்யய்யோ' வென்று கூட கையை நெறித்தாள். ‘பாவம்... பரிதாபம்' என்று சொன்னபடியே, சியாமளா அங்குமிங்கும் சுழன்றாள்; அத்தனைபேரும், ஆகாயத்தைக் கூடப் பார்த்து, ஆண்டவனைத் தேடினார்கள். ஜன்னல் வழியாகவும், வாசல் வழியாகவும், இப்போது மல்லாந்து கிடந்தவளை மனம் நொந்து பார்த்தார்கள். ஆனால் ஒருத்திகூட உள்ளே போகவில்லை. வாசலுக்கு அப்பால் கழுத்தை நீட்டிக் கூடப் பார்க்கவில்லை... கணவனுக்கு இருந்தால், கட்டியவளுக்கும் நிச்சயம் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பெண்களாயிற்றே... தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் எமநோய் என்பதைச் செய்தியாய் - அதுவும் பத்தி பத்தியாய் படித்த பெண்களாயிற்றே... வெளியிலேயும் நிற்க முடியாமல் - உள்ளேயும் போக முடியாமல் அல்லாடினார்கள்.

ஆனால், கைநாட்டான மீனாட்சி சிறுமிக்கு - இது புரியவில்லை. கட்டிலில் மல்லாக்கக் கிடந்த கலைவாணி அக்கா, கண்விழிக்க வேண்டும் என்பதே அவளுடைய விருப்பம்- ஆசை... ஆனால் எப்படி என்பது தெரியாமல் போனதால், திருதிருவென்று விழித்தாள். இறுதியில், வெளியில் நின்றவள்களில், அவளுக்குப் பிடித்த சியாமளாவைக் கையைப் பிடித்து ‘வாங்கக்கா... அக்காவை பாருக்கா' என்று முனங்கியபடியே உள்ளே இழுத்தாள். ஆனால், சியாமளா பயந்து போய் கையை பயங்கரமாக உதறியதால், மீனாட்சிதான் வெளியேவந்து விழுந்தாள். முட்டிக்கால்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/120&oldid=1405118" இலிருந்து மீள்விக்கப்பட்டது