பக்கம்:பாலைப்புறா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 121

ரத்தக் கசிவோடு, அவள், சியாமளாவை குரோதமாகப் பார்த்தபடி எழுந்தாள். திருமதி கல்யாணராமன்தான், மீனாட்சியை, மென்மையாய் மீண்டும் அந்த வீட்டிற்குள் தள்ளிவிட்டு, உபதேசம் செய்தாள்.

‘செம்பு நிறைய தண்ணீர் எடுத்து... அவள் முகத்துல தெளிடி... மூக்குல கை வச்சு பாரு... மொதல்ல மூக்கு... அப்புறம் தண்ணீரு...’

மீனாட்சி, கலைவாணியின் மூக்கைத் தொடவேண்டியதில்லை... அந்த அளவுக்கு, இப்போது அவள் 'எம்மோ... எய்யோ... எத்தான்... எத்தான்...’ என்று மூச்சே பேசுவதுபோல் முணங்கினாள். அப்படியும் மீனாட்சி அவள் மூக்கில் கை வைத்துவிட்டு, சமையலறைக்குள் போய், ஒரு செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள். கலைவாணியக்காவின் முகமெங்கும், நீரை உள்ளங் கையில் வாங்கி வாங்கி, வாரி வாரி அடித்தாள். ‘எக்கா... எக்கா... எழுந்திருங்க அக்கா...’ என்று அவளைத் தோளைப் பிடித்துக் குலுக்கினாள்.

மெள்ளக் கண்விழித்த கலைவாணி, வெளியே திரண்டு நின்ற சிநேகிதிகளை, அரண்டு பார்த்தாள். அப்படி பார்த்த கண்களில் நீர் கொட்டின. அவள் கரங்களோ, பார்வைக்குத் திரையிட்ட அந்தக் கண்களைத் துடைப்பதற்குப் பதிலாக, தலையை அடித்தன. தங்க வளையல்கள் தலைமுடியில் சிக்கி, வலி கொடுக்கும் உணர்வு அற்றுப்போய், தலையில் இருந்து முடிமுடியாய்ப் பிய்த்த கலைவாணியின் கரங்களை, மீனாட்சி பிடிக்கப் போனாள். முடியவில்லை. கீழேதான் விழுந்தாள். விழுந்தவள் மீண்டும் எழுந்து, அக்காவின் அருகே போகப் போனாள். கட்டில் சட்டத்தில் தலையை மோதியவளைப் பிடிக்க முயற்சித்தாள். அந்த முயற்சிக்கு இடையிலேயே, ‘அக்காவைப் பிடிங்கம்மா... அக்காவைப் பிடிங்கம்மா...’ என்று கலைவாணியைப் பிடித்தபடியே, வெளியே நின்றவள்களுக்கு விண்ணப்பம் வேறு செய்தாள். அவர்கள், உடம்பைத்தான் ஆட்டினார்களே தவிர, உள்ளே வரவில்லை. ஆனாலும் வேதாப்பாட்டிக்கு மனம் கேட்கவில்லை; யானைச்சரீரத்தை ஆட்டியபடியே உள்ளே வந்தாள். “எம்மா... கலைவாணி" என்று சொல்லப் போனாள். அதற்குள், வெளிக் கூட்டத்தில் நின்ற அவள் பேத்தி உமா, உள்ளே வந்து, பாட்டியின் சேலையைப் பிடித்து இழுத்தாள். உடனே வேதாப்பாட்டி, அம்மணமாகாமல் இருப்பதற்காக பேத்தியோடு வெளியே வந்தாள். ‘மனோகர் மாமாவுக்கு.. வந்த எய்ட்ஸ் கலைவாணி மாமிக்கும் வந்திருக்கும்... தொட்டால் ஒட்டிக்கும்... இனிமே உள்ளே போனே... எங்க வீட்டுக்கு வெளிலதான் நீ நிக்கணும்’ என்று ஒரு போடு போட்டாள். ‘எங்க' என்ற அந்த ஒற்றைச் சொல்லில் தன்னை ஒதுக்கப்பட்டவளாகக் காட்டிய, கல்லூரிப் பேத்தியை, சிறிது நேரம் வெறித்துப் பார்த்த வேதாப் பாட்டி, ஒதுங்கிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/121&oldid=1405121" இலிருந்து மீள்விக்கப்பட்டது