பக்கம்:பாலைப்புறா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 பாலைப்புறா

சைதாப்பேட்டையில் குடியிருக்கும் சின்னமகன் ஈன்ற பேரனாவது "நம்ம”... என்ற சொல்லை உச்சரிக்க மாட்டானா என்ற ஆதங்கத்தோடும், ஆசையான எதிர்பார்ப்போடும் புறப்பட்டாள் சைதாப்பேட்டைக்கு, அப்போதே...

கலைவாணிக்கு, இன்னும் யதார்த்தம் உறைக்கவில்லை. அந்தப் பெண்கள் ஏன் வெளியே நிற்கிறார்கள் என்ற உண்மை புரியவில்லை... இன்னும் சொல்லப் போனால், அவர்கள் அப்படி நிற்பதுகூட நிழல் உருவங்களாகவே தோன்றின. அடிக்கடி இவளைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டோமே என்று கதிகலங்கி நிற்கும் திருமதி பாலா நாராயணசாமி, ஊரில் இருந்து அம்மா கொடுத்தனுப்பிய எள்ளுருண்டையை, இவளோடு சேர்ந்து கடித்ததற்காக வருந்தும் மோனிகா, யாருமே கலைவாணியின் பார்வையில் பழகியவர்களாய் பதியவில்லை. அவை ஆவி உருவங்களோ, அசல் உருவங்களோ.. அதுவும் மனதில் படவில்லை...

இதற்குள், ஆங்காங்கே ஜன்னல்களில் இருந்து கோபக் குரல்களும், குற்றேவல் குரல்களும், கெஞ்சும் குரல்களும் ஒலித்தன. அத்தனைபேரும் - அதுதான் சாக்கென்று தத்தம் வீடுகளுக்குள் ஒடினார்கள். அலுவலகத்திற்கு கணவன்மாரை ஆயத்தப்படுத்த வேண்டுமே... காலநேரம் பார்க்காமல், கலைவாணிக்கு இரங்க முடியுமா...

ஆயிற்று... எல்லாமே சூன்யமாயிற்று...

எப்படியோ, ஒரு வழியாய் விஷயத்தை அரைகுறையாய்க் கேள்விப்பட்ட மீனாட்சி, மோனிகாவின் யோசனைப்படி, சமையலறைக்குப் போய், இரண்டு இட்லிகளைப் பிய்த்து விள்ளல்களாக்கி, சிறிது சட்னியையும் ஊற்றி, இப்போது மூலையோடு மூலையாய் முடங்கிக் கிடந்த கலைவாணியின் அருகே உட்கார்ந்து, ஒரு இட்லித்துண்டை எடுத்து வாயில் ஊட்டினாள். அவளோ, வாய்க்குள் அந்த உணவுத் துண்டு போகிற உணர்வற்று, கண்கள் திறந்திருக்கக் குருடானாள். எங்கேயோ அந்தரத்தில், வேர்களான கால்கள் அற்று, பார்வை தரும் கண்களற்று, உடலற்றும் உயிரற்றும் போனதுபோல் கிடந்தாள். மீனாட்சி ஒரேயடியாய் உலுக்கிய போது, அந்த இட்லித் துண்டு அவள் வாயில் இருந்து தானாக வெளியே விழுந்தது. ஆனாலும், மீனாட்சி எக்கா எக்கா என்று அவள் காதுகளையும், உடலையும் உலுக்கிய போது, கலைவாணி உலகுக்கு வந்தாள். தன்னையே திடுக்கிட்டுப் பார்த்தாள். அவள், மனோகர் என்கிற எய்ட்ஸ் நோயாளியின் மனைவி. அவள் சென்னையில் இருக்கிறாள். கொட்டு மேளத்தோடு போன மனோகர், இன்றோ, நாளைக்கோ, வரப் போகிறான்.

மீனாட்சி, மலங்கமலங்கப், பார்த்தபோது, கலைவாணி திடீரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/122&oldid=1405122" இலிருந்து மீள்விக்கப்பட்டது