பக்கம்:பாலைப்புறா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 123

அவளைக் கட்டிப்பிடித்து அழுதாள். அந்தச் சிறுமியின் தலையில் முகம் போட்டு தன் சுமையைக் கொடுப்பதுபோல், அதை அழுத்தி அழுத்தி அழுதாள். உடனே மீனாட்சியும், உடம்பை மேல் நோக்காய் திருப்பி, எக்கா எக்கா என்று அரற்றியபோது, கண்ணீர்கள் கலந்தன. கன்னங்களை மாற்றிக் கொண்டன.

சிறிது நேரத்தில், கலைவாணிக்கு ஒரு சின்னத் தெளிவு... ஒரு நப்பாசை... பத்திரிகைச் செய்தி பொய்யாக இருக்கலாம். வேறு எவரின் பெயருக்கோ, மனோகர் பெயர் இடம் மாறி இருக்கலாம். அந்த ஐவர் குழுவில், வேறு ஒருத்தருக்கு டெஸ்ட் நடத்தி இருக்கலாம். உதவிக்குப் போன மனோகர், டாக்டரோ, எவரோ பெயரைக் கேட்டபோது, தெரியாத்தனமாய், தன் பெயரைச் சொல்லி இருக்கலாம்...

கலைவாணி,... தலையை நிமிர்த்தப் போனாள். முடியவில்லை. பிணக்கனமாய் கனத்தது. கால்களைச் சுருக்கப் போனாள்; விறகுக் கட்டையாய் விறைத்தன. ஆனாலும் மீனாட்சியின் உதவியோடு, சுவரோடு சுவராய்ச்சாய்ந்து, கரங்களைப் பற்றி எப்படியோ எழுந்து, கம்பெனி அதிகாரி சூரிய நாராயணனிடம், தன் சந்தேகத்தை உண்மையாக்க நினைத்து, டெலிபோனைத் தொட்ட போது...

பொத்துப் பொத்தென்ற சத்தம்... இரண்டு சூட்கேஸ்கள் தானாய் விழுவது போல் விழுகின்றன... எவரோ... ஒருத்தரின் பூட்ஸ் காலடிச்சத்தம் சன்னம் சன்னமாய்க் குறைந்து கொண்டே போகிறது. மனோகர். ஒருவாரத் தாடியோடும் மீசையோடும் உள்ளே வந்து நிற்கிறான்... பிடிபட்ட ஒரு குருவி இறுதியில்... இனி செய்வதற்கு ஏதுமில்லை. என்பது போல் பார்க்குமே ஒரு பார்வை..., அப்படிப்பட்ட பார்வையாய், பார்க்கிறான். கசங்கிப் போன உடம்பில் கலங்கிப் போன கண்கள். படுகுழியான கன்னங்கள்... அன்றைய மனோகரின் இன்றைய எலும்புக் கூடு; கலைவாணியை, அடிக்கடி முகம் நிமிர்த்திப் பார்ப்பதும்... தலையைக் கவிழ்ப்பதுமாக நின்றான். அவளருகே நடந்து போவதும், அப்புறம் பின்வாங்குவதுமாக அலைக்கழிந்தான்.

கலைவாணி, கையில் ரிசீவரைப்பிடித்தபடியே, அவனை, அண்ணாந்து பார்த்தாள். பிறகு ரிசீவரை, குமிழில் வைக்காமல், தரையில் வீசிப் போட்டபடியே, ஒரே தாவாய்த் தாவி, அவன் மீது முட்டுக்கம்பு மாதிரி சாய்ந்தாள். இதனால் ஒருவரை மேல் ஒருவர் சாய்த்து கீழே விழாமல், அசைவற்று நின்றனர். இறுதியில் சுதாரித்துக் கொண்ட கலைவாணி, வார்த்தைகளை விழுங்கிய ஒலிகளை ஓலமாக எழுப்பியவனை, ஏதோ ஒரு அசுர பலத்தில் குண்டுக்கட்டாய் தூக்கிக் கட்டிலில் போட்டாள். ஒரு தலையணையைக் குறுக்காய்ப் போட்டு, அவன் தலையை அதில் சாய்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/123&oldid=1405123" இலிருந்து மீள்விக்கப்பட்டது