பக்கம்:பாலைப்புறா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 பாலைப்புறா

பிறகு அவன் உடலோடு உடல் போட்டு, அவன் தலையைக் கோதிவிட்டபடியே சபதமிட்டாள்.

‘கவலைப்படாதீங்க... அத்தான்.. ஊர் உலகம் கைவிட்டாலும், நான் ஒங்க பக்கமே இருப்பேன். நீங்க எவளோடேயும் உறவாடி, உங்களுக்கு இந்த நோய் வந்ததாய் நான் நினைக்கல. சொல்லுங்க அத்தான் அப்படி எதாவது உண்டா... எனக்கு தெரியாதா... என் மனோகரைப் பற்றி? இந்த ஆறு மாதத்தில இதைக்கூட தெரிஞ்சுக்காட்டால், நான்... என்ன மனுஷி? ஏதோ விதிவசமாவந்துட்டு. அழாதீங்க அத்தான். அழாதீங்க... அய்யோ இது என்ன கொடுமை... கையெடுத்துக் கும்பிடாதீங்க. கும்பிடாதீங்க. அத்தான். ஒங்களை கைவிடமாட்டேன்’.

எல்லாவற்றையும், ஒசைப்படாமல் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சி, ‘எக்கா... எக்கா... இங்கே பாருங்க'... என்றபோது திரும்பிப் பார்த்த கலை வாணியின் கண்களில், டாக்டர் சந்திராவும், சங்கரனும் அகப்பட்டார்கள்.

கலைவாணி, குலுங்கி குலுங்கி அழுதாள். கட்டிலில் இருந்து குதித்து, டாக்டர் சந்திராவைக் கட்டிப்பிடித்து விம்மி விம்மி, வெடி வெடியாய்ப் பேசினாள். "பார்த்தீங்களா டாக்டரம்மா.. உங்க கண்ணு முன்னாலயே மானும் மயிலுமாய் சுற்றித் திரிந்த நாங்க, எப்படி ஒநாயும், பல்லியுமாய் ஆயிட்டோம்... பாத்தீங்களா... பாத்தீங்களா டாக்டரம்மா...!”

கலைவாணியை, சந்திரா, பார்க்க முடியாமல் பார்த்தாள்.

சூரியப் பிரகாச முகம், இவளை நெருப்பாய் சுட்டது. அவளது கண்ணிரும் கம்பலையும், இவள் உடம்பில் பூகம்பத்தையும், தலையில் எரிமலையையும் ஏற்படுத்தின. கட்டிலில் பிணமாய்க் கிடந்தவனை கோபமாய்ப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க ஏனோ ஒரு பச்சாதாபம். இதற்குள் சங்கரன், சத்தம் போட்டே கேட்டான்.

"ஏன் மிஸ்டர் மனோகர். ஒங்களுக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருக்கிறதாய் எங்க சந்திரா. கல்யாணத்துக்கு முன்னாலயே படித்து படித்து சொல்லி இருக்காள். இந்த அப்பாவி கலைவாணியை காவு கொடுக்காதீங்கன்னு காலுல விழாத குறையா கெஞ்சி இருக்காள். அப்படியும் இந்த பெண்ணை சீரழிச்சிட்டிங்களே... இது அடுக்குமா... உங்களை மாதிரியே இந்தப் பெண்ணும் எய்ட்ஸ்ல கருகப் போறாள். இப்போதாவது ஒங்களுக்கு திருப்தியா மனோகர்...?”

கலைவாணி, திகைத்துப் போனாள். திக்குமுக்காடினாள். சிறிது நேரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/124&oldid=1405124" இலிருந்து மீள்விக்கப்பட்டது