பக்கம்:பாலைப்புறா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 125

பேச்சற்று மூச்சற்றுப் போனதுபோல் நின்றாள். கரங்களை கோர்த்தும், சேர்த்தும், நெறித்தும் ஆகாயமேட்டையும், அப்புறம் தன்னையும் வெறித்துப் பார்த்தாள். தரைவிலகி, கால்கள் ஆகாயத்தில் தொங்குகின்றன. உதடுகளை பற்கள் கோபம் கோபமாய் கடிக்கின்றன. ஒரு கண் எரிகிறது. மறுகண் உறைகிறது. வாயகல, தலையில் கைபோட்டு நிற்கிறாள். பிறகு கல்யாணத்துக்குப் பரிசோடு வந்த டாக்டர் சந்திராவை உற்றுப் பார்த்தாள். அவளோ தலைகவிழ்ந்து நின்றாள். கட்டிலில் கிடந்தவனை, எட்டிப்பார்த்தாள். அவன் குப்புறப் புரண்டான். குப்புறத்தள்ளி... குழியையும் பறித்துவிட்டு, இப்போது முகம் காட்டவே நடுங்குகிறான்.

‘என்ன இது..? அநியாயம்... இப்படி ஒரு நோய் இருப்பது. இவனுக்குத் தெரியும். அவளுக்கும் தெரியும்... அப்போ இவன் கட்டியது தாலியா... தூக்குக் கயிறா. இந்த இவன் கொடுத்தது பரிசா... அல்லது பரிகாசமா... ஏமாந்துட்டேனே. ஏமாந்தால்கூட பரவாயில்லை. ஏமாற்றப்பட்டனே... அவனுக்கும், இவளுக்கும் என்ன சம்பந்தம்? எப்படியான உறவு...’

மலைமகளாய் நின்ற கலைவாணி, துர்க்கையாய், மகிஷாகரமர்த்தினியாய் மாறிக் கொண்டிருந்தாள்.

சங்கரன், மனோகரைச் சாடியதை, அட்சரம் பிசகாமல், வாயகலக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் பார்வை கூர்மைப்பட்டது. வாய் கோணல்மானலானது. மெள்ள மெள்ள முயல் குட்டியாய்த் தோன்றிய அவள் முகபாவம், மோவாய் நீண்ட புலிக்குட்டியானது... கை விரல்கள், இரும்புக் கம்பிகள் போல் கூர்மைப்பட்டன. துவண்ட கால்கள் நிமிர்ந்து நீண்டன. அவளால், டாக்டரம்மா என்று அழைக்கப்பட்ட சந்திராவும், பாசத்தின் உச்சமாகத் தோன்றிய மனோகரும், இப்போது மானிடத்தின் எச்சங்களாக, அடுத்துக்கெடுத்த துரோகிகளாகத் தோன்றினார்கள். கல்யாணப் பரிசாக, சந்திரா கொடுத்த நிரோத்துக்களும், மனோகர் விமான நிலையத்திற்கு, போகும் போது தன்னை அறியாமலே ‘எனக்கு ஹெச்.ஐ.வி. இல்லை’ என்று சொன்னதும், அவர்களை அடுத்துக் கெடுக்கும் துரோகிகளாய் காட்டும் ஆதாரங்களாயின. சங்கரன் சொல்லச்சொல்ல, அதை நம்ப முடியாததுபோல், காதுகளுக்குமேல், இரண்டு கரங்களையும் தலையோடு சேர்த்து உயர்த்தி, அசல் மான்குட்டி மாதிரி காதுகள் சிலிர்க்க, கண்களை வெட்டியவள், இப்போது அவர்களை வெட்டப் போவதுபோல் விறைத்துப் பார்த்தாள். ஒரு அநியாயக்காரியும், ஒரு அக்கிரமக்காரனும், பாதுகாப்பான கூட்டில் இருந்து, தன்னை தள்ளிவிட்டதாய் நினைத்துத் தவித்தாள். கால் இடறிய ஒரு பந்து போலத்துடித்தாள்.

கலைவாணி, தானும் ஒரு ஹெச்.ஐ.வி.க்காரி என்பதையும், எதிர்கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/125&oldid=1405125" இலிருந்து மீள்விக்கப்பட்டது