பக்கம்:பாலைப்புறா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 பாலைப்புறா

எய்ட்ஸ் பாடையில், அவனோடு சேராமலே, அதே சமயம் அவனாலேயே உடன்கட்டை ஏற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதையும் மெள்ள, மெள்ளப் புரிந்து கொண்டாள். உடலுறவால் இது ஏற்படும் என்பதைத் தெரிந்து வைத்தவள்தான். ஆனால் அளப்பரிய கணவ பக்தியால், அவனை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், தன்னைப் பற்றி அவள் நினைத்தாளில்லை. முகம் தெரியாயந்திரநாட்டில், கணவன் எப்படிக் கலங்குகிறானோ என்று மட்டுமே துடித்துப் போனவள், இப்போதுதான், தனக்காகத் துடித்தாள். தனக்காக கழிவிரக்கம் கொண்டாள். சுயபயம் ஏற்பட ஏற்பட, அவள் ஒரு பயங்கரியாய் மாறிக் கொண்டிருந்தாள். ‘டாக்டரம்மா...! நீயுமா...? என்பது போல் சந்திராவைப் பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள்.

இந்தக் கொடுரமான அமைதியில் தலை தாழ்ந்து நின்ற சந்திரா, சங்கரனை எரிச்சலோடு பார்த்தாள். மாமா வீட்டில், இவள் கத்திய கத்தலில், உள்ளே வந்த மாமாவுக்கும், அத்தைக்கும், தலைக்குமேல் வெள்ளம் போன விரக்தியில், நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தாள். டாக்டர் வேலையில் சேர்த்து விட்டதால், தங்கை மகள், தன்னையோ, தான் பெற்ற மகனையோ மதிக்கவில்லை என்று மாமாவிற்கு ஒரு தவறான அபிப்ராயம் வரக் கூடாது என்பதற்காகவே, அவள், மோகன்ராம் விரட்டியது உட்பட எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னாள். இதைக் கேட்க கேட்க ஆத்திரப்பட்ட மாமா, கிட்டத்தட்ட சங்கரனைப் பார்த்து கையை ஓங்கிவிட்டார். மகனை, ஒருநாளும் திட்டாத அத்தை கூட அவனை ‘நாயே... பேயே’ என்பது மாதிரி திட்டி விட்டாள். ஒருவர் துக்கத்தில், சந்தோஷப்படுவது, ஒரு மனிதன் செய்கிற காரியமில்லை என்று அத்தை படபடத்துப் பேசினாள். சங்கர், சித்தம் தெளிந்து, தவறுக்கு வருந்துகிறவன்போல் தலை தாழ்த்தி நின்றான். அன்று மாலையிலேயே, கலைவாணியை உடனடியாகப் பார்க்க புறப்பட்ட சந்திராவை, அவர்கள்தான், மறுநாள், காலையில் போகலாம் என்று சொல்லி விட்டார்கள். இந்தச் சங்கரையும் பாவப்பரிகாரமாய், இவளுக்கு உறுதுணையாய் அனுப்பி வைத்தார்கள். இவளும், இவனை கட்டிக்கப் போகிறவனாய்க், கூட்டி வராமல், மாமா.. அத்தைக்கு ஒரு நல்ல மருமகளாய் தன்னைக் காட்டிக் கொள்ளவே கூட்டி வந்தாள். ஆயிரம் கத்தினாலும், இந்த சங்கரனை, தான் கழித்து விடவில்லை என்று, அவன் பெற்றோரிடம் காட்டிக் கொள்ள, இங்கே கூட்டி வந்தாள். இவரோ, சொல்லக்கூடாததைச் சொல்லி, நடக்கக் கூடாதது நடப்பதற்கு, நடைபாதை போட்டுவிட்டாரே!

டாக்டர் சந்திரா, சங்கரனை கோபமாகவும், கலைவாணியை தாபமாகவும் ஒரே சமயத்தில், வேறு வேறு பார்வையாகப் பார்த்தாள். சங்கரன், எதுவும் நடக்காதது போல் மதர்ப்பாய் நின்றபோது, கலைவாணியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/126&oldid=1405126" இலிருந்து மீள்விக்கப்பட்டது