பக்கம்:பாலைப்புறா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 127

பார்வை, கட்டிலில் இப்போது மல்லாக்கக் கிடந்த மனோகர் மேல் பட்டது. சொல்லிக் கொடுத்தும் கேளாத துரோகி... அடுத்துக் கெடுத்த பாவி... அவனையே வெறித்துப் பார்த்த கலைவாணி, சந்திரா பக்கம் திரும்பினாள்.

"சொல்லு. டாக்டர். இந்த துரோகிக்கு ஹெச்.ஐ.வி. இருக்குதுன்னு, ஒனக்கு முன்கூட்டியே தெரியுமா...? இது தெரிந்தும்தான் என் கருமாந்திரத்துக்கு வாழ்த்த வந்தியா... சொல்லு... சொல்லுடி...”

சந்திராவால், கலைவாணியை ஆச்சரியமாகக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏறிட்டுப் பார்க்கப் போனால், முகத்தை எதுவோ கீழே பிடித்து இழுக்கிறது. தன்னிலை விளக்கம் சொல்லப் போனால், தானே அங்கே இல்லாமல் போனதுபோன்ற இருள்நிலை. இதற்குள், மனோகர். அரைகுறையாய் முனங்கினான்.

‘கலை... கலைவாணி, அவங்க நிரபராதி... நான் நான்தான்...’

‘பாவ மன்னிப்பாடா கேட்கிறே? செய்யுறதையும் செய்திட்டு... இன்னுமாடா ஒனக்கு பேச்சு வருது...’

மனோகர், போர்வையை இழுத்து தலையோடு சேர்த்து, முகத்திற்கு முக்காடு போட்டுக் கொண்டான். சந்திரா, குன்றிப் போய் நின்றாள். சங்கரன் ‘டா’ போட்டு பேசிய கலைவாணியைப் பார்த்தபடியே, அங்குமிங்குமாய் நடைபோட்டான். பிறகு ‘போகலாம்’ என்பது போல் சந்திராவைப் பார்த்து கண்ணடிக்கப் போனான். வேலைக்காரச் சிறுமி மீனாட்சி, ஒவ்வொருவர் முகமாய் பார்த்து, ஒன்றும் புரியாமல் நின்றாள்... மெளனத்தின் கொடுங்கோல்... உலகமே அஸ்தமித்தது போன்ற அருவ நிலை... வெளிச்சமே இருளாகி, அப்போதே அமாவாசை ஏற்பட்ட இருண்மை நிலை. வார்த்தைகள், தொண்டைகளுக்குள் சிக்கிக் கொண்டன. வெளியே உள்ள இரைச்சல்,... வானொலிப் பாட்டு, தெருக் கூச்சல் அத்தனையும் அற்றுப் போன காதுகள், மரத்துப் போன நிலை...

முந்தானை சரிய விரல் கடித்து நின்ற கலைவாணி, ஆங்காரியாய், ஓங்காரியாய்க் கூச்சலிட்டாள்... மனோகரை நோக்கிப் பாய்ந்தாள்... அவன் தலைமாட்டுப் பக்கம் போய், அவன் முகத்தைக் கடித்துத் தின்னப் போவது போல் பற்களைக் கடித்தாள். அவன் கழுத்தைத் திருகப் போவதுபோல், கரங்களை மார்புக்கு முன்னால் கொண்டு போய், வளைவாகக் குவித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ... ஏது நினைத்தாளோ... ‘என்னை என்ன செய்தாலும் தகும்' என்பதுபோல மல்லாந்து கிடந்த மனோகரின் முகத்தைப் பார்த்த மாற்றமோ... அவளுக்கே தெரியாது... கணவனின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக, நெரிக்கப் போன தன் கரங்களையே, ஒன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/127&oldid=1405127" இலிருந்து மீள்விக்கப்பட்டது