பக்கம்:பாலைப்புறா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 பாலைப்புறா

டொன்று நெரிக்கவிட்டாள். அவன்தலையில் அடிப்பதற்குப்பதிலாக, தன் தலையிலே அடித்துக் கொண்டாள்; அப்புறம் அவன் தலைமாட்டில் நின்றபடியே, சத்தம் போடாமலே ஏங்கினாள். அவள் அழுகைக்குக், குரல் கிடைக்கவில்லை. வடிவற்ற உணர்வுகளின்தாக்குதல்... வடிகால் கிடைக்காத அநாதை நிலை. ஆத்திரம் உருவாக்கப் போன வன்முறையை, துக்கம், மென்மையான அழுகையாய் மாற்றிய ரசவாதம். இடியற்றமழை... இணையற்ற தவிப்பு...

கலைவாணி, அப்படியே குன்றிப் போனாள். நேராய் நின்றவள், சிறுகச் சிறுகக் குறுகி, குறுகிக் குறுகி குமைந்து, சன்னஞ் சன்னமாய் சரிந்து, அப்படியே தரையில் சாய்ந்தாள்... கால்களை மடித்துப் போட்டு, இடுப்பின் மேல் பகுதியை அதில் இழுத்துப் போட்டு, அப்படியே கிடந்தாள். உருவம் கலைத்து, அருவமாய் ஆனவள்போல் இருந்தாள்; சிறிது நேரத்தில் மீண்டும் அழுகைச் சத்தம்... பிறகு மனோகரை தாக்கப் போவதுபோல் தலை நிமிர்கிறது. அப்புறம் தனக்கு வந்ததை, தானே தாங்கியாக வேண்டும் என்று நினைத்ததுபோல் தலை தானாய்க்கவிழ்கிறது... மனம். தானாய்க் கேட்டது. இப்படியும் ஒருத்தன் இருப்பானா... இப்படியும் ஒரு மூர்க்கன்... இப்படியும் ஒரு கொலைகாரன் இருப்பானா... இருப்பானா... இப்படியும் ஒரு டாக்டர். இப்படியும் ஒரு பெண்... இருப்பாளா... இருப்பாளா... இருக்கின்றானே... இருக்கின்றாளே.”

சந்திராவைப் பார்த்து, சங்கரன் மீண்டும் கண்ணடித்தான். அவளோ, திகைத்துப் போனவளாய் கைபிசைந்து நின்றாள். அவளுக்கு பூமி குலுங்கியது. ஆகாயம் சுருண்டு போய் அங்கேயே வந்தது... அந்த வீடு சுற்றுகிறது... அத்தனையும் சுற்றுகின்றன.

மீனாட்சிதான், கட்டில் பக்கம் போய் எண்ணா... எண்ணா என்றாள். கீழே குனிந்து எக்கா... எக்கா என்றாள்... என்ன செய்யலாம் என்ற கேள்விப் பாவனையோடு சங்கரனைப் பார்த்தாள். ஏதாவது செய்யுங்கள் என்பது போல் சந்திராவை, கெஞ்சல் பார்வையாய் பார்த்தான்.

இதற்குள், கலைவாணி எழுந்தாள்... உள் பாடியும், பாவாடை விளிம்பும் பளிச்சென்று தெரிய எழுந்தாள். மனோகரின், கால்மாட்டில் போய் நின்று கொண்டாள். ஒப்பாரியே ஓங்காரமானது. இதயத்துடிப்பே, வார்த்தைகளானது... மனமே வாயானது...

‘ஒன்னை கெடுத்து.. என்னையும் கெடுத்திட்டியே பாவி... ஒன்னை நீ கெடுக்கலாம்... ஆனால் என்னை எப்படிப்பா கெடுக்கலாம்? என்கையப் பிடித்து அக்கினியைச்சுற்றி வந்து, என்னை அக்கினியில் தள்ளிட்டியேடா... இதைவிட தாலிச் செயினாலயே... என் கழுத்தை இறுக்கிக் கொன்னுருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/128&oldid=1405128" இலிருந்து மீள்விக்கப்பட்டது