பக்கம்:பாலைப்புறா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 129

கலாமே பாவி... படுபாவி... என்னை... இந்த பாடுபடுத்தின நீ...என்ன பாடுபடப்போறியோ... உயிரோட கொன்னுட்டியே... என்னை பிணமா பேச வச்சுட்டியே... என்னை இந்த நிலைக்கு ஆளாக்குன... ஒன்னை விடமாட்டேன்... விடவே மாட்டேன்.”

கலைவாணி, குறுக்கே வந்த மீனாட்சியை உதறிப் போட்டுவிட்டு, இடைமறித்த சந்திராவை எட்டித் தள்ளிவிட்டு, மனோகர் மேல் பாயப் போகிறவள் போல், கைகளை மீண்டும் வளைத்தபடி, கட்டில் சட்டத்தில் வயிற்றை அழுத்தி, அவனை நோக்கி, அப்படியே குனியப் போனாள். பிறகு, அப்படியே நிமிர்ந்து, மேல் நோக்காய் வந்து, செங்குத்தாய் நின்றபடிக் கேட்டாள். குரல் மாற்றிக் கேட்டாள். ஆங்காரக் குரல் அழுகையாக, பழிபோட்ட பார்வை விழிபிதுங்கிப் போக, வாதாடுவதுபோல் கேட்டாள்...

"மனோகர். ஒனக்கு... நான் எப்போவாவது இம்சை கொடுத்திருக்கேனா... பள்ளிக் கூடத்துல படிக்கும் போதோ... அம்மன் கொடை... ஆத்தாள்கொடைன்னு ஊர்ல விசேஷம் நடக்கும் போதோ... ஒன் வீட்டுக்கு நான் வரும்போதோ, என் வீட்டுக்கு நீ வரும்போதோ, ஒன்னை, நோகடித்தேனா. அவமானப்படுத்துனேனா.. அலட்சியப்படுத்துனேனா சொல்லுப்பா... இந்த பாவிகிட்ட சொல்லுப்பா.”

மனோகர், லேசாய் தலையைத் தூக்கினான். வாய் ‘இல்லல்ல”... என்று இழுத்தது. தலை, அங்குமிங்குமாய் ஆடியது. கைகள், சமிக்ஞையிட்டன... கலைவாணி, சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தாள்.

"அப்போ... எதுவுமே செய்யாத என்னை... ஒனக்கு மனசாலயும் கெடுதல் நினைக்காத என்னை... எதுக்குப்பா இப்படி ஆக்கிட்டே...? நீ மெட்ராஸ்லே இருந்து வரும் போதெல்லாம், வாய் நிறைய சிரிப்பேனே... நீ... கம்ப்யூட்டரைப் பற்றியும், டார்வின் தியேரி பற்றியும் பேசுறதை மாணவியாய் நின்று கேட்டேனே! ஒன்னை மாதிரி அறிவாளி கிடைக்கிறது... அபூர்வமுன்னு போகிற ஊரெல்லாம் பேசுனனே... பேசுன வாயை பூட்டிட்டியே... என்னை ஒரு புழுப் பூச்சாய் ஆக்கிட்டியே மனோகர், இது அடுக்குமா? அப்போ நீ பேகன பேச்சும், சிரித்த சிரிப்பும், வெறும் நடிப்புத்தானா... பரவாயில்ல... மனோகர், உனக்கு ஆஸ்கார் பரிசேகிடைக்கும்பா...அய்யோ... அய்யய்யோ... அம்மோ... யார்கிட்ட சொல்லுவேன்... என்கிட்டயே சொல்ல முடியாததை, எப்படிச் சொல்வேன்...?”

மனோகர், மீண்டும் குப்புறப்படுத்தான். மீனாட்சி... 'எக்கா... எண்ணா’ என்று அரற்றியபடியே, பூனைக்குட்டி மாதிரி சுற்றி வந்தாள். அதே சமயம், டாக்டர் சந்திரா, மெள்ள மெள்ள விழிப்புற்றாள். தட்டுத்தடுமாறி நடந்தாள், ஆடி அடங்கியது போல் நின்ற கலைவாணியின் தோளைத் தொட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/129&oldid=1405129" இலிருந்து மீள்விக்கப்பட்டது