பக்கம்:பாலைப்புறா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 பாலைப்புறா

கலைவாணி, அந்த வீடே கத்துவதுபோல் கத்தினாள்.

"என்னைத் தொடாதடி. தொடாதே. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லு. நான்... ஒன் தங்கையாய் இருந்தால், இப்படி மறைப்பியா... நாம் இரண்டு பேரும் இடம் மாறி நின்னு... என்னால ஒனக்கு இப்படி ஏற்பட்டிருந்தால்... ஏத்துக்குவியா... அடியே பாவி... டாக்டரம்மா... டாக்டரம்மான்னு வாய் நிறையக் கூப்பிட்டேனே.. அம்மா என்கிற வார்த்தையை அழுத்தி உச்சரித்தேனே... ஒரே ஒரு சொல்லு... உண்மையான சொல்லு. அதை என்கிட்ட சொல்லி இருந்தால், இப்படிச்சொல்லத் தகாதது நடந்திருக்காதே... உண்மையைக் கொன்னு என்னை ஒரேயடியாய்க், கொன்னுட்டியே... உனக்கு எதாவது தான் கெடுதல் செய்தால்... அதையாவது சொல்லுடியம்மா... என்மனசை சமாதானப்படுத்திக்கிறேன்...”

டாக்டர் சந்திரா, கலைவாணியைக் கட்டிப் பிடிக்கப் போனாள். பிறகு, தன்னை எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டு, நடுங்கும் விரல்களால் கலைவாணியின் கண்களை முந்தானையால் துடைக்கப் போனாள். கலைவாணி, அந்தக் கையை ஒருதட்டு தட்டினாள். ‘எப்படி இருக்கேன்னு என்னை வேடிக்கையாடி... பார்க்க வந்தே... போடி... வெளியிலே போடி’ என்று அவளை வாசலைப் பார்த்து தள்ளினாள். அந்த வேகத்தில், தள்ளியவளும், தள்ளப்பட்டவளும் கீழே விழுந்தார்கள். ஒருவரோடொருவர் பின்னிக் கிடந்தார்கள். இதில் கலைவாணியை குற்றவாளியாய்க் கருதி, அவளிடம் இருந்து சந்திராவை மீட்க வேண்டும் என்று நினைத்து, சங்கரன், கீழே குனிந்தான். கலைவாணியின் தலைமுடியை கைக்கு அடக்கமாக்கினான். அதை முறுக்கி முறுக்கி, சுற்றிச் சுற்றி, அவளை அப்புறப்படுத்தப் போனான். கலைவாணிக்கு, பிராணனையே பிடுங்குவதுபோல் இருந்தது. மண்டை ஒடு கழன்று, அவன் கைக்குப் போகப் போவதுபோல் இருந்தது. மனோகரும் கீழே குதித்து, சங்கரை கோபமாகத் தள்ளினான். மீனாட்சி தீமூட்டிக் குழலால், சங்கரனின் முட்டிகளில் இரண்டு தட்டுதட்டினாள். இந்த அமளியில், சங்கரனின் பெருவிரல் கலைவாணியின் வாய்க்குள் போனது... கலைவாணி, கடித்தாளா அல்லது அவள்கடி படும்படி வைத்தானா என்பது தெரியவில்லை... சங்கரன், பெருவிரலை வெளியே எடுத்தபோது அதில் ரத்தம் சொட்டியது... அவன், அந்த விரலை உதறிய போது, ரத்தத்துளிகள், கலைவாணியின் நெற்றியிலும் சந்திராவின் வாயிலும் தெறித்தன.

‘நீங்கல்லாம் ஒரு மனுஷனா..?’ என்று சங்கரனைப் பார்த்து கத்தியபடியே, சந்திரா எழுந்தாள். விறைப்பாக நின்ற கலைவாணியின் முன்னால் ஆஜரானபடியே அரற்றினாள்...

"நீ என் தங்கையா இருந்தால், இப்படிச்செய்திருக்கமாட்டேம்மா. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/130&oldid=1405130" இலிருந்து மீள்விக்கப்பட்டது