பக்கம்:பாலைப்புறா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 131

கொலைகாரிதாம்மா... இதோ நிராயுதபாணியாய் நிற்கேம்மா... நீ எனக்கு, என்னதண்டனை தந்தாலும் வாங்கிக்கிறேம்மா... இந்த குற்ற உணர்வோடு, என்னால நிம்மதியாய் வாழ முடியாதும்மா... ஒன் கையாலயே என்னைக் கொன்னுடும்மா...’

கலைவாணி, இப்போது, சந்திராவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஏனென்று கேட்கவில்லை. தடாரென்று தரையில் விழுந்தாள், மூச்சற்றுப் பேச்சற்றுக் கிடந்தாள். அவள் வாய் கோணியது. கண்கள், சாய்ந்து பார்த்தன; உடல், தாறுமாறாய்க் கிடந்தது... 'எம்மோ... எம்மா...’ என்ற மெல்லிய ஒலம் மட்டுமே..அப்புறம் வாயடக்கம்; கண்ணடக்கம்; உடலடக்கம்...

மீனாட்சி, சத்தம் போட்டே அழுதாள். மனோகர், எதாவது செய்யுங்கள் என்பதுபோல், சந்திராவின் முன்னால் போய் நின்று, அவளைக் கையெடுத்துக் கெஞ்சினான். உடனே, அவளும் டாக்டரானாள்... கலைவாணியின் மூக்கில் கை வைத்தாள். அவள், உடையைத் தளர்த்தினாள்... நாடி பிடித்துப் பார்த்தாள். குறிப்பறிந்து மீனாட்சி கொண்டு வந்த டம்ளரை வாங்கி, தண்ணிரை அவள் முகத்தில் மென்மையாய் தெளித்தாள். அப்போது, சங்கரன் சந்திராவை எச்சரித்தான்...

‘வந்துரு சந்திரா... வந்துரு. ஏதாவது செய்திடப் போறாள்...’

சந்திரா, கட்டிக்கப் போகிறவனைப் பார்க்காமலும், பதில் பேசாமலும் கலைவாணியின் கழுத்தை நீவிவிட்டாள். கண்களில் திரையிட்ட முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டாள். வெளியே வேடிக்கை பார்ப்பது போல் திரண்ட கூட்டத்தை எரிச்சலோடு பார்வை இட்டாள். இதற்குள், சங்கரன் ரத்தப் பெருவிரலை உதறிக் கொண்டே பேசினான்.

"ஆனாலும், ஒரு பெண்ணுக்கு... இவ்வளவு ஆங்காரம் கூடாது. புருஷனுக்கு வந்ததைவிட... இவளுக்கு வந்தது பெரிசா போயிட்டாம்...”

வெளியே நின்ற கூட்டத்திற்காக, பல்லைக்கடித்து கோபத்தையும் கடித்த சந்திரா, பொறுமை இழந்து, சங்கரைச் சாடினாள்.

"மூளை இல்லாமல் பேசாதீங்க சங்கர். கலைவாணி இடத்தில வேற யாராவது இருந்திருந்தால் கொலைகூட செய்திருப்பாங்க. அவளுக்கு இப்போ சுயமே அற்றுப் போச்சு.. ஹிஸ்டிரியா மாதிரி வந்துட்டு. ஒன் பேரு என்னம்மா...? மீனாட்சியா... நான் எழுதிக் கொடுக்கிறதை மருந்துக் கடையில காட்டு... பிளாஸ்டிக் பேப்பருக்குள்ள இருக்கிற ஊசியையும் ஒரு சின்னபாட்டிலையும் தருவாங்க. சீக்கிரமா வாங்கிட்டு வா. உங்களத்தான்... அந்தப் பெண்கிட்டே இருபது ரூபாய் கொடுங்க.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/131&oldid=1405133" இலிருந்து மீள்விக்கப்பட்டது