பக்கம்:பாலைப்புறா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

132

“என் பெருவிரலுக்கும் அப்படியே...?” "உங்களுக்கு உயிர்போகாது. கொஞ்சம் பொறுங்க”

சந்திரா, ஒரு மூலையில் குப்புறக் கிடந்த கைப்பையைத் தூக்கி, ஒரு காகிதக் கொத்தை எடுத்து நாலு வரி எழுதிவிட்டு, எழுதியதையும், கசங்கிப் போன இருபது ரூபாய் நோட்டையும் மீனாட்சியிடம் கொடுக்க, அவள் ஒரே ஒட்டமாய் வெளியே ஒடினாள். வெளியே திரண்ட கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஓடினாள்.

கலைவாணி, தரையோடு தரையாய்க் கிடந்தாள். சிறிது நேரத்தில், பித்துப் பிடித்து, எல்லோரையும், மலங்க மலங்க பார்த்தபடியே கிடந்தாள். மேற் கூரையை வெறுமையாய் பார்த்தாள். பக்கத்தில் நின்ற சந்திராவைப் பாராதது போல் பார்த்தாள். பிறகு, அவளை பார்க்க விரும்பாததுபோல் குப்புறப் படுத்தாள். பின்னர், மோவாயைத் தூக்கித் தூக்கித் தரையில் இடித்தாள். ‘யாராவது விஷம் தாங்களேன்’ என்று பேசிய வாய், பல்லோடு சேர்ந்து, தரையில் இடிபட்டது. அந்தத் தரையைச் சிவப்பாக்கியது. கால்கள் வெட்டிக் கொண்டன. கரங்கள், தலையில் முட்டிக் கொண்டன.

நல்ல வேளையாக, மீனாட்சி, ஊசி மருந்தோடு வந்துவிட்டாள். டாக்டர் சந்திராவுக்கு புரிந்துவிட்டது. தன்னந்தனியாய் அவளுக்கு ஊசி போட முடியாது. ஆகையால், வாசலுக்கு வெளியே தலையை நீட்டி, கும்பலாய் நின்ற கூட்டத்தைப் பார்த்து ‘கலைக்கு ஊசி போடணும்... கொஞ்சம் ஹிஸ்டிரியா மாதிரி தெரியுது... யாராவது ரெண்டு பேரு வாங்க... கையையும் காலையும் பிடிச்சுக்கணும்’ என்றாள்.

சந்திரா, ஏதோ கையில் சோடா பாட்டிலை வைத்து எறியப் போவது போல் கூட்டம் சிதறியது. இதையும் மீறி, உள்ளே போகப் போன சியாமளாவை, மோனிகா பிடித்துக் கொண்டாள். நாராயணசாமி, தனது மனைவி பாலாவின் காதில் எதையோ கிசுகிசுத்தார். எவரும் வருவது மாதிரி தெரியவில்லை. உள்ளே நின்ற மீனாட்சிதான் வெளியேவந்து, ‘நான் பிடிச்சிக்கறேன்’ என்றாள். சந்திராவால், அவள் முதுகைத் தட்டிக் கொடுக்கத்தான் முடிந்தது. இதோ... இங்கே கூடியிருக்கிறவர்களில் இரண்டு மூன்று பேர்இல்லாமல், கலைவாணிக்கு பலவந்தமாக ஊசிபோட முடியாது. அந்த இரண்டு மூன்று பேரை, சந்திரா, அந்த படித்த கும்பலில் தேடிக் கொண்டிருந்தாள். பலனில்லை. திடீரென்று கூட்டம் சிதறி ஓடியது. பெண்கள், பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடினார்கள். கணவன்மார், மனைவிகளையும், மனைவிகள் கணவன்மாரையும், பேத்திகளை, பாட்டிகளும், பாட்டிகளைப் பேத்திகளும் இழுத்தபடியே ஓடி ஓடி... சிதறிச் சிதறி, சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/132&oldid=1405134" இலிருந்து மீள்விக்கப்பட்டது