பக்கம்:பாலைப்புறா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

சு. சமுத்திரம்

தொலைவில் நின்று உற்றுப் பார்த்தார்கள். அவர்களின் பார்வை பதிந்த திசையை திரும்பிப் பார்த்த சந்திரா, அழுதுவிட்டாள். கலைவாணி, ஒரு கையை நீட்டியபடி, வெளியே நின்றாள். சந்திராவின் முகத்தைப் பார்த்ததும் கேவினாள்,

“என்னால...தாங்கமுடியல... போடு போடு... எழுந்திருக்கமுடியாமல் போடு..."

டாக்டர் சந்திரா, கலைவாணியை உள்ளே கூட்டிப் போனாள். ஒரு நாற்காலியில் உட்காரவைத்தாள். பாட்டில் மருந்தை, ஊசி வழியாய் உறிஞ்சி, கலைவாணியின் தோள் பகுதியில் குத்தினாள். அவளோ... முகத்தில் ஒரு சின்னச் சுழிப்புகூட இல்லாமல், கையை யாரோ மயில் இறகால் வருடிக் கொடுப்பது போல், தனக்குத்தானே சிரித்தபடிக் கிடந்தாள். தனக்குத்தானே பேசியபடி... இருந்தாள்.

ஐந்தே ஐந்து நிமிடத்தில், கலைவாணிக்கு கிறக்கம் ஏற்பட்டது. அதுவே மயக்கமானது. வீடு வெளியாகி, வெளியே வீடானது போன்ற மயக்கம். மனம் சுருங்கிச் சுருங்கி, உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிப் போனது. அவளைப் பொறுத்த அளவில், தானோடுதானாய் அத்தனையும் செத்துப் போயின.

சந்திரா, கலைவாணியைக் கட்டிலுக்கு நகர்த்தினாள். அவளும் அடம் பிடிக்காமல், அப்படியே சாய்ந்தாள். மனோகர், அங்குமிங்குமாய் ஓடினான்; நடந்தான் நின்றான். சந்திரா, அவனைக் கடுமையாகவும் கொடுமையாகவும் பார்த்தாள். சிறிது நேரத்தில், அனுதாபமாகவும் நோக்கினாள். அந்த அனுதாபம் கோபமாகவும், இந்தக் கோபம் அனுதாபமாகவும் மாறிக் கொண்டும், அவளை மாற்றிக் கொண்டும் இருந்தன. இறுதியில், தனக்குத் தானே சொல்வதுபோல், மனோகரைப் பார்க்காமல், மனோகருக்காகவே, சந்திரா பேசினாள்.

"நான் எவ்வளவோ சொல்லியும்...”

சங்கரன், ரத்தம் உறைந்த பெருவிரலை ஆட்டியபடியே குறுக்கிட்டு பேசினான்,

‘சந்திரா, நீ வெறும் டாக்டர்... ஒரு டாக்டர் என்ன சொல்லணுமோ, அதை மட்டுமே சொல்லு...’

சந்திரா, சங்கரனை ஒரு பார்வை பார்த்தாள். அது ஒப்புதலா, நிராகரிப்பா என்பது அவளுக்கே தெரியாது. ஆனாலும் தெளிவாகவே பேசினாள். மனோகருக்கு உபதேசமாய்ச் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/133&oldid=1405135" இலிருந்து மீள்விக்கப்பட்டது