பக்கம்:பாலைப்புறா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 பாலைப்புறா

“கலைவாணி... இதே மாதிரிதான் பிஹேவ் பண்ணுவாள்ன்னு பயப்பட வேண்டாம். எடுத்த எடுப்பிலேயே, யாராய் இருந்தாலும், இப்படித்தான் நடப்பாங்க. கலை விவரமானவள்; எப்படியோ அனுசரித்துப் போக பழகிடுவாள். இந்தாங்க... இந்த சீட்டுலே ஒங்களுக்கும், கலைவாணிக்கும் மாத்திரை எழுதியிருக்கேன். வேளா வேளைக்கு சாப்பிடுங்க. சத்துணவா சாப்பிடுங்க, மாத்திரையை கலைவாணிக்கிட்டே, நீங்க கொடுக்க வேண்டாம். இந்தப் பொண்ணையே கொடுக்கச் சொல்லுங்க. நீ யாரும்மா...?”

'வேலைக்காரி... மீனாட்சி’

'நான்... ஒன்னை மாதிரி வேலைக்காரியாகவும், நீ என்னை மாதிரி டாக்டராகவும் ஆயிருக்கணும்...’

சங்கரன், பல்லைக் கடிப்பதைப் பார்க்காமல், சந்திரா, மூச்சு விட்டபடியே செத்துக் கிடந்த கலைவாணிக்கு, ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவதுபோல், தலைதாழ்த்தி நின்றுவிட்டு, வாசலுக்கு வெளியே வந்தாள். அங்கே இன்னமும் கலையாமல் நின்ற கூட்டம், அவளைச் சூழ்ந்து கொண்டது. அந்தக் கூட்டத்தின் குரலாக, திருமதி பாலா நாராயணசாமி பகர்ந்தாள். அவள் பேசப்பேச, அப்போதுதான் வந்த பழைய பகையாளி திருமதி மஞ்சுளா கண்ணன், அவளுக்கு ஒப்புக் கொடுத்து தலை ஆட்டினாள்.

‘நீங்கதான் எங்களுக்கும் ஒரு சின்ன உதவி செய்யணும்; இங்கே எல்லாருமே குடும்பத்தோடு இருக்கிறவங்க... நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்; கலைவாணின்னா எங்களுக்கு உயிர்; அதுக்காக எங்க உயிரை நாங்க கொடுக்க முடியாது. நீங்க அவங்களுக்கு சொந்தக்காரங்க மாதிரி தெரியுது... அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டால், கோடி புண்ணியம்; இப்பவே வேண்டாம்; பாவம் குழந்தைங்க... இங்கேயே இருக்கட்டும்; சாயங்காலமாய் ஒரு டெம்போவோட வந்து கூட்டிக்கிட்டுப் போனால் போதும்... ஓனருக்கு நாங்க வாடகை கொடுத்துடுவோம். பாவம் நல்ல குழந்தைங்க’

"இவங்களை கூட்டிக்கிட்டு போறேன். அதுக்கு நீங்க, நான் சொல்றதைக் கேட்கணும்...!”

"நீங்க என்ன சொன்னாலும், கட்டுப்படுறோம். நீங்க டாக்டரா... நர்சா?”

'டாக்டர்தான்... அதுவும் எய்ட்ஸ்லே ட்ரெயினிங் எடுத்த டாக்டர்... இவங்களால் ஒங்களுக்கு எந்த ஆபத்தும் வராது'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/134&oldid=1405136" இலிருந்து மீள்விக்கப்பட்டது