பக்கம்:பாலைப்புறா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அந்தக் கம்பெனியில் கார்ப்பரேட் அலுவலகம்; அரசு அலுவலகங்களுக்கு சலாம் போடும் கம்பெனியாக இருந்தாலும், அவற்றைவிட தோற்றத்திலும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பல மடங்கு மேலான கட்டிடம். அண்ணாசாலையில் உள்ள இந்தக் கட்டிடத்தை அப்படியே தூக்கி அமெரிக்காவில் வைத்தாலும், அங்குள்ளவர்கள் முகம் சுழிக்க மாட்டார்கள். அப்பேர்ப்பட்ட கட்டிடம்... நடையை சுகமாக்கும் தரைவிரிப்பு... வெள்ளைக்காளான் நிறத்தில் பஞ்சு மெத்தை இருக்கைகள்; இந்த இருக்கைகளில் இருப்பவர்களின் தலைகளை மட்டும் காட்டும், நான்கடி உயரத்தில் பல்வேறு இடங்களை எல்லை பிரித்துக் காட்டும் அலுமினிய உருளைகளுக்குள் பொருத்தப்பட்ட நோவா பலகைகள்... ஆங்காங்கே ஒரு சில பெரிய இடத்து அறைகள்... அத்தனையும் கதவுகளால் மூடப்பட்டு, அந்தக் கதவுகளில் தங்க முலாம் எழுத்துக்கள். மனிதர்கள் இயங்கினாலும், கம்ப்யூட்டர்கள் இயக்கப்பட்டாலும், சூன்யமயமான தோரணை. இதற்கு ஈடு கட்டுவது போல் வெளிவளாகத்தில், வட்டமாய் சுற்றிய மேசைக்குப் பின்னால், வரவேற்புக் கன்னிகளின் மென்மையான சத்தங்கள்... கீழே பரந்து விரிந்த பகுதிகளில் ஒரு மூலையில், மனோகரை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குக் கொண்ட போய் விட்ட அந்த கண்டசா காரின் உள்ளும் புறமும் முழுவதும் சோப் போடப்பட்டு, பினாயில் தெளிக்கப்பட்டு, நீர்க் குழாயில் ஏற்பட்ட சின்ன நீர் வீழ்ச்சி அந்தக்காருக்கு உள்ளயும் வெளியேயும் கொட்டியது. எய்ட்ஸ் கிருமிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அந்தக் காரின் சந்து பொந்துகளை, டிரைவர் ஒரு கூரிய இரும்புக் கம்பியால் குத்திக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் தன் முகத்தை, காதுவழியாய்க் கைக்குட்டையைத் திணித்து மூடியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/136&oldid=1405138" இலிருந்து மீள்விக்கப்பட்டது